பெருமகிழ்ச்சி மாலை:- தலைவியி னழகு குண மாக்கஞ் சிறப் பினைக் கூறுவது. |
மெய்க்கீர்த்திமாலை:- சொற் சீரடி யென்னுங் கட்டுரைச் செய்யுளாற் குலமுறையிற் செய்த கீர்த்தியைக் கூறுவது. |
காப்பு மாலை:- தெய்வங் காத்தலாக மூன்று செய்யுளானும் ஐந்து செய்யுளானும் ஏழ்செய்யுளானும் பாடுவது. |
வேனின் மாலை:- வேனிலையு முதிர் வேனிலையுஞ் சிறப்பித்துப் பாடுவது. |
வசந்த மாலை:- தென்றலை வருணித்துப் பாடுவது. |
தாரகை மாலை:- அருந்ததிக் கற்பின் மகளிர்க்குள்ள வியற்கைக் குணங்களை வகுப்பாற் கூறுவது. தூசிப்படையி னணியைப் புகழ்ந்த வகுப் பென்பாரு முளர். |
உற்பவ மாலை:- திருமால் பிறப்புப் பத்தனையு மாசிரிய விருத்தத்தாற் கூறுவது. |
தண்டக மாலை:- வெண்பாவான் முந்நூறு செய்யுட் கூறுவது. இதுவே புணர்ச்சிமாலை யெனவும் படும். |
வீரவெட்சிமாலை:- சுத்த வீரன் மாற்றாரூரிற் சென்ற பசுநிரைகோடற்கு வெட்சிப் பூமாலை சூடி யவ்வண்ணம் போய் நிரைகவர்ந்துவரி லவனுக்கு முன்பு தசாங்கம் வைத்துப் போய் வந்த வெற்றிப் பாடுவது. |
வெற்றிக்கரந்தை மஞ்சரி:- பகைவர் கொண்ட தந்நிரை மீட்போர் கரந்தைப் பூமாலை சூடிப் போய் மீட்பதைக் கூறுவது. |
போர்க்கெழுவஞ்சி:- மாற்றார்மேற் போர் குறித்துப் போகின்ற வய வேந்தர் வஞ்சிப் பூமாலை சூடிப் புறப்படும் படையெழுச்சிச் சிறப்பை யாசிரியப்பாவாற் கூறுவது. |
காஞ்சி மாலை:- மாற்றா ரூர்ப்புறத்துக் காஞ்சிப்பூமாலை குடியூன்றலைக் கூறுவது. |
நொச்சிமாலை:- புறத்தூன்றிய மாற்றார்க் கோடலின்றி நொச்சிப் பூ மாலைசூடித் தன் மதில்காக்குந் திறங்கூறுவது. |
உழிஞைமாலை:- மாற்றார தூர்ப்புறஞ்சூழ வுழிஞைப் பூமாலை சூடிப் படை வளைப்பதைக் கூறுவது. |
தும்பை மாலை:- மாற்றாரொடு தும்பைப் பூமாலை சூடிப் பொருதுவதைக்கூறுவது. |
வாதோரணமஞ்சரி:- கொலைபுரி மதயானையை வயப்படுத்தி யடக்கின வர்கட்கும், எதிர்பொரு களிற்றை வெட்டி யடக்கினவர்கட்கும், பற்றிப் பிடித்துச் சேர்த்தவர்கட்கும், வீரப்பாட்டின் சிறப்பை வஞ்சிப் பாவாற் றொடுத்துப் பாடுவது. |