பக்கம் எண் :

கற்பியல் சூ.311
 

மாந்தர்க்குத்  தவிர்ந்தது   எனவும்   கூறியவாறு   போலும்.  அஃதாவது   தரும  சாத்திரம்  வல்லாரைக்
கொண்டுணர்க.
1
  

நச்
  

இது முதலூழியில் வேளாளர்க்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.
  

இதன் பொருள்:  மேலோர்   மூவர்க்கும்   புணர்த்த  கரணம் - வேதநூல்தான்   அந்தணர்  அரசர்
வணிகரென்னும்  மூவர்க்கும்  உரியவாகக்  கூறிய கரணம், கீழோர்க்கு  ஆகிய  காலமும் உண்டு-அந்தணர்
முதலியோர்க்கும்  மகட்கொடைக்குரிய   வேளாண்  மாந்தர்க்குந்  தந்திரமந்திர  வகையான்   உரித்தாகிய
காலமும் உள என்றவாறு.
  

எனவே,  முற்காலத்து  நான்கு  வருணத்தார்க்கும்  கரணம்  ஒன்றாய்   நிகழ்ந்தது  என்பதாம். அஃது
இரண்டாம்  ஊழி தொடங்கி வேளார்க்குத் தவிர்ந்தது என்பதூஉந்  தலைச்   சங்கத்தாரும் முதனூலாசிரியர்
கூறிய  முறையே  கரணம்  ஒன்றாகச்  செய்யுள்  செய்தார்  என்பதூஉங்   கூறியவாறாயிற்று.  உதாரணம்
இக்காலத்திலின்று.
  

சிவ
  

இச் சூத்திரம் திருமண விதிமுறைகளுக்குரியார் யார் என்பது கூறுகின்றது.
  

இ-ள்:  அந்தணராகிய  மேலோர்  அரசர்வணிகர்  வேளாளர்  என்ற  மூவர்  ஆகிய   நால்வருக்கும்
விதித்த  கரணம்  அடியோர்  பாங்கு  வினைவல  பாங்கு  முதலிய  கீழோர்க்கு  ஆகிய காலமும் உண்டு
என்றவாறு.
  

எவ்வுயிர்க்கும்     செந்தண்மை  பூண்டு  ஒழுகுபவர்  ஆதலின்  அந்தணர்  மேலோர் எனப்பட்டனர்.
அந்நால்வரின்    கீழிருந்து    குடிமக்களாய்    ஏவல்    செய்து    வாழ்தலின்   அடியோர்   பாங்கும்
வினைவலபாங்கும் கீழோர் எனப்பட்டனர்.


1. இவ்வுரைக்கேற்ப  இச்சூத்திரப்  பொருள்  வருமாறு: இக்காலத்தில் அந்தணர் அரசர் வணிகர் என்னும்
மூன்று  மேற்குலத்தார்க்கும்  புணர்த்த கரணம் முற்காலத்தில் வேளாளர்க்கும் உரியதாய் நால்வருக்கும்
ஆகி இருந்ததும் உண்டு. நச்சினார்க்கினியர் உரையும் விளக்கமும் பார்க்க.