பக்கம் எண் :

118தொல்காப்பியம் - உரைவளம்
 

தன்வயிற் சிறப்பினும்-தலைவனில் தான் புதல்வற்குச் சிறந்தானாகி  அத்தலைவன் மாட்டும் அவன்
காதலித்த பரத்தையர் மாட்டுஞ் செல்லாமற் புதல்வனைத் தன்பாற் சிறை செய்தற் கண்ணும்.
  

உதாரணம்
  

“புள்ளிமிழகல்வயல்” என்னும் மருதக்கலி (79)யுள்  

*“அணியொடு வந்தீங்கெம் புதல்வனைக் கொள்ளாதி
மணிபுரை செவ்வாய்நின் மார்பகல நனைப்பதாற்
றோய்ந்தாரை யறிகுவேன் யானெனக் கமழுநின்
சாந்தினாற் குறிகொண்டாள் காய்குவளல்லளோ

  

“புல்லலெம் புதல்வனைப் புகலகனின் மார்பிற்
பல்காழ் முத்தணியாரம் பற்றினன் பரிவானான்
மாணிழை மடநல்லார் முயக்கத்தை நின்மார்பிற்
பூணினாற் குறிகொண்டாள் புலக்குவளல்லளோ”

  

“கண்டேயெம் புதல்வனைக் கொள்ளாதி நின்சென்னி
வண்டிமிர் வகையினர் வாங்கினன் பரிவானா
னண்ணியார்க் காட்டுவதிதுவெனக் கமழுநின்
கண்ணியாற் குறிகொண்டாள் காய்குவளல்லளோ
எனவாங்கு,

  

பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி
நீங்கா யிகவாய் நெடுங்கடை நில்லாதி
  


* பொருள் : அணியொடு  வந்து எம் புதல்வனைக் கொள்ளாதே.  ஏன்எனின்  அவன்  வாய்நீர்
நின்மார்பை நனைக்கும். அதனால் கமழுநின் சந்தனத்தால் நின் பரத்தைமையைக் கருதுமவள் நீ
புணர்ந்தவரை அறிவேன் என்று வருந்துவாள் அல்லளோ.
  

எம்  புதல்வனைத்  தழுவாதே.  அவன்  நின்மார்பில்  ஆரத்தைப்  பறித்துச்  சிதைப்பான். 
அதனால் நின் மார்பின் அணியினாலேயே   நின்  பரத்தையர்  முயக்கத்தை  நினைபவளாகிய 
அவள்  புலப்பாள் அல்லளோ.
  

எம் புதல்வனைக் கண்டு எடுக்காதே. நின் தலையில் உள்ள பூங்கொத்துப் பூக்களைப் பறித்து
மாலையை  அறுப்பான்.  அதனால்  மணக்கும்  கண்ணியினால்  பிறர் முயக்கம் உண்டு எனக் 
கருதும்  அவள்  பிறர்  முயக்கத்தை  நின்  அறுபட்ட  கண்ணி  அறிவிக்கிறது  என்று சினம் 
கொள்வாள். அதனால் நீ புதல்வனை  விட்டுப்  போகாமல்  நின்பரத்தையர்  குறிக்கோளையும்
கடவாமல்  இங்கேயே  நில்லாதே.  நின்றால்  அவன்  நின் அணியைச் சிதைப்பான். அதனால் 
அவனை விட்டுப் பரத்தையர் சேரிக்கே செல்.