1. பொருள் : தலைவ! கடற்கரையிடத்து நாவற்கனி வீழ்ந்ததாக அதைத் தம் இனம் எனக்கருதி வண்டுகள் மொய்க்க அவற்றை நாவற்பழங்கள் என எண்ணி நண்டு வந்து கவ்வ அதனின் மீளமுடியாமல் வண்டுகள் ஒலிக்க இரைதேடி அங்குவந்த நாரை அவற்றை விடுவிக்கும்படியான துறை பொருந்திய மாந்தை என்னும் ஊர் போன்ற தலைவியின் நலம் களவுக்காலத்தும் இப்படித்தான் பொலிவிழந்திருந்தது. நீ களவுக் காலத்தில் இவளை விட்டு நீங்காது அருள் செய்யினும் அவள் கண் பசந்து காட்டியதற்குக் காரணம் சிறிது முயக்கம் நெகிழ்ந்ததால் நலம் குறைந்த காரணமா? அல்லது கட்குடியர்க்குக் கள்மயக்கம் நீங்கின் அக்கள்ளிடத்து விருப்பம் போலக் கூடிச் சிறிது நீங்கிய காலத்து மீளவும் கூட்டத்து எழுந்த வேட்கை காரணமா? இரண்டும் இல்லை. பிரிவே காரணம். அவ்வாறே இன்றும் நின்பிரிவே இவளை வாட்டியது. நீ வந்தவுடன் நீங்கியது. யான் ஆற்றியதாகக் கூறுவது எற்றுக்கு? 2. அடங்கா ஒழுக்கமாவது பரத்தமையொழுக்கம். 3. அழிதலாவது பரத்தைமையை எண்ணி நெஞ்சு வருந்துதல். 4. அடங்கக் காட்டுதற் பொருளாவது தலைவன் பரத்தைமையைப் பொறுத்துக் கொண்டு அடக்கமுடையளாய் மனையறம் மேற்கொள்ளுதற்கேற்றவாறு கூறப்படும் செய்திகள். |