பக்கம் எண் :

30தொல்காப்பியம் - உரைவளம்
 

எனப் பிறபிற பெண்டிரைக்காட்டித் தலைவன் ஊடலுணர்த்தியவாறு அறிந்து கொள்க.
  

பிரிவினெச்சத்துப்1  புலம்பிய விருவரைப் பரிவு நீக்கிய பகுதிக் கண்ணும் என்பது-பிரிவு நிமித்தமாக
வருந்திய  மனையாளையும்  காமக்  கிழத்தியையும்  அவ் வருத்தத்து நின்று நீக்கிய பகுதிக் கண்ணும்
கூற்று நிகழும் என்றவாறு. அஃதாவது
2 பிரியேன் என்றல்.
  

“பொன்னும் மணியும் போலும் யாழநின்
நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும்
போதும் பணையும், போலும் யாழநின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்
இவை காண்தோறும் அகமலிந்து யானும்
அறநிலை பெற்றோர் அனையேன் அதன் தலைப்
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்
வினையும் வேறு புலத்து இலனே, நினையின்
யாதனிற் பிரிவாம் மடந்தை
காதல் தானுங் கடலினும் பெரிதே”
3

(நற்றிணை-166)
  

இக்கூற்று இருவர்4 மாட்டும் ஒக்கும்.
  

நின்று  நனி  பிரிவின்  அஞ்சிய  பையுளும்  என்பது-நிலைநிற்க மிகப் பிரியும் பிரிவின்கண் அஞ்சிய
நோயின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.
  

“ஆள் வழக்கற்ற சுரத்திடைக் கதிர்தெற
நீளெரி பரந்த நெடுந்தாள் யாத்துப்


1. பிரிவின் எச்சம்- பிரிவு நிமித்தம்.
  

2. அஃதாவது-பிரிவு வருத்தத்தை நீக்குதலாவது.
  

3. பொருள் :  மடந்தையே! நின்மேனி பொன்; நின் கூந்தல் நீலமணி;  நின்கண்  நீலப்பூ;  நின்தோள்
மூங்கில்.  இவற்றைக்   காணும்தோறும் யான் அறத்தில் நிலைபெற்றார் பெறும் பயனை அடைந்தேன்
ஆவேன்.  புதல்வனும் விளையாட்டைக் கற்றான் வேறு  இடத்துச்  சென்று யான் செய்யும் தொழிலும்
இல்லை. மேலும் நின்பாற் காதல் பெரிதுடையேன். இப்படியிருக்க நாம் எவ்வாறு எக்காரணம் கொண்டு
நாம் பிரிவோம்? பிரியேம் ஆதலின் வருந்தி என்னையும் வருத்தாதே.
  

4. இருவர்-மனையாள், காமக் கிழத்தி