அன்னவை பிறவும் மடம்பட வந்த தோழி கண்ணும் என்பது-மேற்சொல்லப்பட்டவையிற்றினும் மடமைபட வந்த தோழி மாட்டும் கூற்று நிகழும் என்றவாறு. |
அவையாவன : |
“இல்லென் இரந்தோர்க் கொன்றீயாமை இழிவெனக் கல்லிறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருளாகுமோ”1 |
(கலித்-2) |
எனவரும். |
இந்நிகரன2 கூறியவழித் தலைவன் கூற்று நிகழும். இவ்வழிக் கூறுங் கூற்று காமமாகத் தோன்றாது பொருளாகத் தோன்றும், காமத்திற்கு மாறாகக் கூறல் வேண்டுதலின். |
“இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பந்துடைத் தூன்றுந் தூண்” |
(குறள்-615) |
எனவரும்.3 |
வேற்று நாட்டகல்வையின் விழுமத்தானும் என்பது-வேற்று நாட்டு அகலும் வழி வரும் நோயின் கண்ணும் என்றவாறு. |
அஃதாவது4, பிரிவு ஒருப்பட்ட பின்பு போவேமோ தவிர்வேமோ எனச் சொல்லும் மனநிகழ்ச்சி. |
1. பொருள் : யானொன்றும் இல்லேன்; ஏதேனும் ஈக என வந்து இரந்தவர்க்கு ஒன்று ஈயாமை இழிவாகும் என்று நினைந்து கற்பாறை வழிகடந்து ஈட்டிவர நினைத்த பொருள் இவளினும் சிறந்தபொருளாகுமோ? |
2. இந்நிகரன-இல்லென.....பொருளாகுமோ என்பது போலும் கருத்துகள். |
3. இந்நிகரன....எனவரும்-‘இல்லென்.....பொருளாகுமோ’ என்பது போல்வன தோழி கூறுமிடத்துத் தலைவன் கூற்று காமம் காரணமாக இன்றிப் பொருள் காரணமாக நிகழும். ஒருவன் தன் காமத்தை மட்டும் விரும்பாமல் செய்யும் தொழிலையே விரும்பி ஒழுகுவானாயின் அவன் தன் உற்றார்க்கு வரும் துன்பம் போக்கித் தாங்கும் தூண்போல்வான் என்று வருதல் கண்டு உணரலாம். |
4. அஃதாவது-நோயாவது |