பக்கம் எண் :

கற்பியல் சூ.543
 

இவ்விடங்களின் வரும் பொருள் வேறுபாடுகட்கும் இவையே இடமாகக் கொள்க.
  

நச்
  

இது,  பார்ப்பார்  முதலிய  பன்னிருவருங் (501-2)  கற்பிடத்துக்  கூற்றிற்கு உரியராயினும்  அவருள்
தலைவன் சிறந்தமையின் அவன் கூற்றெல்லாந் தொகுத்துக் களவிற் கூறியாங்கு முற்கூறுகின்றது.
  

இதன் பொருள் :   கரணத்தின்   அமைந்து    முடிந்தகாலை-ஆதிக்கரணமும்   ஐயர்   யாத்த
கரணமுமென்னும்  இருவகைச்  சடங்கானும்  ஓர்குறைபாடின்றாய்  மூன்று  இரவின்  முயக்கம்  இன்றி
ஆன்றோர்க்கு அமைந்த வகையாற் பள்ளி செய்து ஒழுகி நான்காம் பகலெல்லை முடிந்த காலத்து.
*
  

ஆன்றோராவார், மதியுங் கந்தருவரும் அங்கியும்.
  

நெஞ்சு  தளை  அவிழ்ந்த  புணர்ச்சிக்  கண்ணும்-களவிற் புணர்ச்சி போலும் கற்பினும் மூன்று நாளுங்
கூட்டமின்மையானும் நிகழ்ந்த மனக்குறை தீரக்கூடிய கூட்டத்தின் கண்ணும்.
  

அது நாலாம் நாளை யிரவின் கண்ணதாம்.
  

உதாரணம்
  

“விரிதிரைப் பெருங்கடல்வளைஇயவுலகமு
மரிதுபெறு சிறப்பிற் புத்தேணாடு
மிரண்டுந் தூக்கிற் சீர்சாலாவே
பூப்போலுண்கட் பொன்போன் மேனி


* திருமணம்  முடிந்த  முதல்  மூன்று  நாளும்  தலைவன்  தலைவியைக்  கூடாமல் நான்காம் நாளில்
கூடவேண்டும்  என்பது  ஆரியர்  கோட்பாடு. முதல்நாள்  மதிக்கும் இரண்டாம் நாள் கந்தருவர்க்கும்
மூன்றாம்  நாள் நெருப்புக்கும் தலைவியைப்  புணரக்  கொடுத்து நாலாம் நாளே தலைவன் புணர்தல்
வேண்டும் என்பது ஆரியர் கொள்கை. பிறை தொழுதாலேயே கற்புக்கு இழுக்கு என நினைக்கும் தமிழ்
மகளிர்க்கு அக் கொள்கை  பொருந்தாது.  அதனால்  நச்சினார்க்கினியரின்  உரை  தமிழ்  மரபுக்கு
ஏற்புடைத்தாகாது-சிவ.