பக்கம் எண் :

கற்பியல் சூ.551
 

“ஆற்றல் சான்ற தாமே யன்றியு
நோற்றோர் மன்ற நங்கேளிரவர்தகைமை
வட்டிகைப் படூஉந்திட்ட மேய்ப்ப
வரிமயிரொழுகு நின்னவ்வயிறருளி
மறைநவி லொழுக்கஞ் செய்துமென்றனர்
துனிதீர் கிளவி நந்தவத்தினு
நனிவாய்த்தன வான்முனிவர் தஞ்சொல்லே”
1
 
 

இதனுள்,  நந் தலைவரே யன்றிச் சுற்றத்தாரும் நோற்று ஓர் கருப்பந்தங்கிய நினது வயிற்றைக் கண்டு
உவந்தெனவும்  அதற்கேற்ற  சடங்கு  செய்து  மென்றாரெனவும், முற்காலத்து நாங்கேட்ப நமக்குக்கூறிய
முனிவர் சொல்லும் உண்மையாயிற்றெனவுங் கூறியவாறு காண்க. தலைவன் கூற்று வந்துழிக்காண்க.
  

புதல்வற்  பயந்த  புனிறுசேர்  பொழுதின்-அங்ஙனஞ்சிறப்பெய்திய  புதல்வனைப் பெற்ற ஈன்றணுமை
சேர்ந்த காலத்தே.
  

நெய்   அணி   மயக்கம்   புரிந்தோள்  நோக்கின்-சுற்றக்  குழாத்துடனே  வாலாமை  வரைதலின்றி
எண்ணெயாடும் மயக்கத்தை விரும்பிய தலைவியை முகமனாகக் கூறுதலைக் குறித்து.
  

ஐயர் பாங்கினும்-முனிவர் மாட்டும்.
  

அமரர்ச்சுட்டியும்-தேவர்கள் புதல்வனைப் பாதுகாத்தலைக் கருதியும்.
  

செய்  பெருஞ்  சிறப்பொடு  சேர்தற்  கண்ணும்-அக்காலத்துச் செய்யும் பெரிய சிறப்புக்களைக் குறித்த
மனத்தோடே சென்று சார்தற் கண்ணும்.
  

சிறப்பாவன : பிறந்த  புதல்வன்  முகங்காண்டலும் ஐம்படை பூட்டலும் பெயரிடுதலும் முதலியனவும்,
எல்லா  முனிவர்க்குந்  தேவர்க்கும்  அந்தணர்க்குங் கொடுத்தலும். சேர்தல் கூறவே, கருப்பம் முதிர்ந்த
காலத்துத் தலைவன்


1. பொருள் : தோழீ! ஆற்றலமைந்த நம் தலைவரேயன்றிச் சுற்றத்தாரும் மிக நோற்றுள்ளனர். அவர்கள்
வட்டிகையில்  பொருள்  பொதிந்த திட்டம்போல மயிர் ஒழுங்குள்ள நம் வயிற்றில் கருவமைந்துள்ளது
கண்டு மகிழ்ந்து வேதத்துக் கூறிய சடங்குகளைச் செய்வோம் என்றும் கூறினர். ஒரு காலத்தில் முனிவர்
நம்மிடம்   கூறிய   மகப்பேறு   பற்றிய   சொல்லானவை   நம்   தவத்தினைக்  காட்டிலும் நமக்கு
வாய்ப்புடையனவாயின.