என குறிப்பிற்கேற்ப ஒழுகினையாகலின் நினக்கோர் குற்றமின்றென்று தான் பிழைத்த பருவமுணர்த்தும் இடத்தும், கூற்று நிகழும். |
உதாரணம் |
“நகைநீ கேளாய் தோழி தகைபெற நன்னாட் படராத் தொன்னில் முயக்கமொடு நாணிழுக் குற்றமை யறிகுநர் போல நாங்கண்டனைநங் கேள்வர் தாங்கண்டனைய நாமென்றோரே”1 |
இதனுள், நன்னாள் வேண்டுமென்னாது கூடிய கூட்டத்துள் தங்கி நாணுச் சுருங்கி வேட்கை பெருகிய நம்மினும் ஆற்றாராயினர் போல நாங் குறித்தவழி வந்தொழுகிய தலைவர் தாங் குறித்தனவே செய்தனமென நமக்குத் தவறின்மை கூறினரெனத் தோழிக்குத் தலைவி கூறியவழித் தலைவன் பிழைப்புக் கூறியவாறு காண்க. |
நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளிய பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் தன்னின் ஆகிய தகுதிக் கண்ணும் : தன்னின் ஆகிய நோன்மையும் பெருமையும் மெய்கொள - தலைவனான் உளதாகிய பொறையையுங் கல்வி முதலிய பெருமையையும் உடைய மகவைத் தலைவி தன் வயிற்றகத்தே கொள்கையினாலே; பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி அருளிய தகுதிக் கண்ணும்-வேதத்தை ஆராய்தல் அமைந்த அந்தணரோடு கூடி இருத்தற்குச் செய்யத் தகுஞ் சடங்குகளைச் செய்த தகுதிப்பாட்டின் கண்ணும். |
தன்னினாகிய மெய்-கருப்பம். அவிப்பலி கொள்ளும் அங்கியங் கடவுட்கும் அது கொடுக்குந் தலைவற்கும் இடையே நின்று கொடுப்பித்தலின் அந்தணரை ‘வாயில்’ என்றார். |
1. பொருள் : தோழீ! நகைப்புக்குரிய நிகழ்ச்சியொன்று கேட்பாயாக முன்னர் முயங்குதற்கேற்கும் நல்ல நாளைப் பாராது நினைத்தபோது முயங்கிய முயக்கத்தில் நம் நாண் சுருங்கிய நிலையை அறிந்தவர் போலத் தாமும் ஆற்றாராய் நாம் குறித்த குறியிடத்துத் தவறாது வந்து கூடிய நம் தலைவர் இன்று தாம் குறித்த இடத்துத் தவறாது நாம் வந்து கூடியதாக நம்பால் குற்றம் இல்லை என்பதைக் கூறினார். |