சிறந்த செய்கை யவ்வழித் தோன்றி யறம்புரி நெஞ்சமொடு தன் வரவறியாமை புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத்தானும் என்பது-சிறந்த செய்கையினையுடைய அவ்விடத்துத் தலைவன் தோன்றி அறம்புரி நெஞ்சத்தோடே தனது வரவைத் தலைவியறியாளாக நின்று தலைவியைப் புறஞ்செய்து அவள் மாட்டுளதாகிய ஊடலைப் பெயர்த்தல் வேண்டின இடத்தும் தலைவி மாட்டுக் கூற்று நிகழும் என்றவாறு. |
அவ்வழி என்றது-தலைவியுங் காமக்கிழத்தியைப் போலத் தன் மகனைக் கொண்டு விளையாடிய வழியும் என்றவாறு. |
“மையற விளங்கிய” என்னும் மருதக்கலியுள் (81) |
“பெரும, விருந்தொடு கைதூவா வெம்மையும் உள்ளாய் பெருந்தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்றத் திருந்துபு நீகற்ற சொற்கள் யாம்கேட்ப மருந்தோவா நெஞ்சிற் கமிழ்த மயின்றற்றாப் பெருந்த காய்கூறு சில”1 |
எனவும், |
“எல்லிழாய், சேய்நின்று நாங்கொணர்ந்த பாணன் சிதைந்தாங்கே வாயோடி ஏனாதிப்பாடியம் என்றற்றா நோய்நாந் தணிக்கும் மருந்தெனப் பாராட்ட ஓவா தடுத்தடுத்தத் தத்தா என் பான்மான வேய் மென்தோள் வேய்த்திறஞ் சேர்த்தலும் மற்றிவன் வாயுள்ளிப் போகான் அரோ”2 |
எனவும், |
“உள்ளி உழையே ஒருங்கு படைவிடக் கள்வர் படர்தந்ததுபோலத் தாம்எம்மை எள்ளுமார் வந்தாரே ஈங்கு”3 |
எனவும், இவ்வாறு வரும். |
|
1-3 பொருள் : (தலைவி மகனைப் பார்த்து) பெரும! பெருந்தகாய்! விருந்தினர் வருதலால் விட்டு வாராத எம்மையும் நீ நினையாமல் தெருவிலே தாய்மார் நினக்குச் சொற்களைக் கற்றுத்தரக் கற்றுத்தரத் திருத்தமாக நீ கற்ற சொற்களை நின்னால் இயல்பாகவே இன்பமுடன் இருக்கும் எம் நெஞ்சம் மேலும் அமுதம் உண்டாற்போல இனிமை பெறச் சில சொல்வாயாக என்றாள். பின்னர்த் தோழியைப் பார்த்து, தோழீ! நம் பாணனை எங்குள்ளாய் என யாம் கேட்க அவன் |