பக்கம் எண் :

கற்பியல் சூ.8139
 

தன்     நினைவாகச்   செயலை  மறந்து  மீள்வானோ  என அஞ்சினாள். அவ்வச்சத்தினைத் தோழிக்குக்
கூறும்  கூற்று  உண்டு.    அவ்வாறு கூறும்போது வழியில் நிகழும் கருப்பொருள்களின் காதற் காட்சியைச்
சுட்டியே  கூறுவாள். இவ்வாறு    அஞ்சுவதே கிழவோன் செய்வினைக்கு அஞ்சுவதாகும். அவ்வச்சத்தைக்
கூறுவதே கிழவோன் செய்வினைக்கு அச்சம் கூறுதலாகும்.
  

இவ்வாறு    கூறும் அச்சக் கிளவியானது களவுக் காலத்து  உடன்போக்குச் சென்ற தலைவிக்கேயுரியது.
உடன்போக்குச்  செல்லாத  ஆனால்  களவொழுக்கம் மேற்கொண்டு   பின்னர்க் கற்பொழுக்கம் கொண்ட
தலைவிக்கோ   களவின்வழி   வராது   பெற்றோரால்  தரப்பெற்று   மணந்து  கற்பொழுக்கம்  கொண்ட
தலைவிக்கோ உரியதன்று. ஏன்எனின் அவ்விருவர்க்கும் வழியருமை அறியவராது ஆதலின்.
  

147.

தோழியுள் ளுறுத்த வாயில் புகுப்பினும்
ஆவயின் நிகழும் என்மனார் புலவர்
(8)
 

இளம்
  

என்-எனின், இதுவுமது.
  

இ-ள்:  தோழியுள்ளிட்ட வாயில்களைப் போகவிட்ட அக்காலத்தும்1 முற்கூறிய2 நிகழும்3 என்றுரைப்பர்
புலவர், என்றவாறு.
  

உதாரணம் வந்தவழிக் காண்க.
  

நச்
  

இது தோழி முதலிய வாயில்கட்கு எய்தாத தெய்துவித்தது.
  

இதன்  பொருள்: தோழி  உள்ளுறுத்த  வாயில்  புகுப்பினும்-தலைவனது  செலவுக்  குறிப்பு  அறிந்து
அவனைச் செலவழுங்குவித்தற்குத் தோழியுள்ளிட்ட வாயில்களைத் தலைவி போக


1. தோழியுள்ளிட்ட   வாயில்களைத்   தலைவி   தலைவன்பால்   செலவழுங்கக்   கூறுமாறு   போக்கிய
அக்காலத்தும்.

2. முற்கூறிய-முன்சூத்திரத்திற்    சொல்லப்பட்ட    கருப்பொருளும்    கருப்   பொருள்   நிகழ்ச்சியும்.
கூறிய-கூறப்பட்டன-வினையாலணையும் பெயர்.

3. நிகழும்-கிழவோன் செய்வினைக்கு அச்சம் நிகழும்.