விட்ட அக்காலத்து அவர் மேலனபோலக் கூறுங் கூற்றுக்களும் ஆவயின் நிகழும் என்மனார் புலவர்-தலைவி அஞ்சினாற்போல அவ்வச்சத்தின் கண்ணே நிகழுமென்று கூறுவர் புலவர் என்றவாறு. |
‘அறனின்றி யயறூற்றும்’ (கலி-3) என்னும் பாலைக்கலியுள் இறைச்சியும், வினையுமாகிய பூ முதலியன கூறியவாற்றால் தலைவிக்கிரங்கி நீர் செலவழுங்குமெனக் கூறுவாள் யாமிரப்பவு மெம கொள்ளாயாயினை’ எனப் பிற வாயில்களையும் கூட்டி உரைத்தவாறு காண்க. |
சிவ |
விளக்கம் |
மேலைச் சூத்திரத்தில் தலைவி, கிழவோன் செய்வினைக்கு அஞ்சிய அச்சக்கிளவி பற்றிக் கூறப்பட்டது. இச்சூத்திரத்தில் தலைவி அவ் வச்சக்கிளவியைத் தலைவன்பால் செலவழுங்குவிக்கும்படித் தன் தோழி முதலிய வாயில்களைப் போகவிடும் காலத்தும் கூறிப் போகவிடும் என்பது கூறப்பட்டது. இவ்வாறு தலைவி வாயில்களிடம் கூறிப் போகவிட்டதற்குச் செய்யுள் கிடைத்திலது. அதனால் இளம்பூரணர் உதாரணம் வந்த வழிக்காண்க என்றார். |
நச்சினார்க்கினியர், தலைவியானவள் வாயில்களைத் தலைவன்பால் சென்று செலவழுங்குவிக்குமாறு அனுப்புக் காலத்து அவர்கள் சென்று தலைவனிடம் செலவழுங்கக் கூறும்போது அக்கூற்றுத் தலைவியின் கூற்றாக அமையாமல் தம் கூற்றாகவே கொண்டு கூறுவதுபோலவும் கிழவோன் செய்வினைக்கு அச்சக்கிளவி நிகழும் என்று இச் சூத்திரம் கூறுவதாகக் கொண்டார். அதனால் அவர் பாலைக்கலியில் உள்ள அறனின்றி அயல் தூற்றவும் (3) என்னும் பகுதியைக் காட்டினார். |
இச் சூத்திரத்தையும் மேலைச் சூத்திரத்தையும் கொண்டு கிழவோன் செய்வினைக்கு அஞ்சும் அச்சக் கிளவியைத் 1. தலைவி தானே தோழியிடம் கூறுதலும் 2. தன்னாற் செலவழுங்குவிக்குமாறு அனுப்பப்படும் வாயில்களிடம்தான் கூறுதலும் 3. வாயில்கள் தலைவி கூற்றையுட்கொண்டு தாமே கூறுதல் போலத் தலைவனிடம் கூறுதலும் என மூவகையில் அமைவதாகக் கொள்ளலாம். |