தேர்நடை பயிற்றுந் தேமொழிப் புதல்வன் பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு காமநெஞ்சந் துரப்ப யாந்தம் முயங்கல் விருப்பொடு குறுகினேம் ஆகப் பிறைவனப் புற்ற மாசறு திருநுதல் நாறிருங் கதுப்பினெங் காதலி வேறுணர்ந்து வெரூஉமான் பிணையின் ஒரீஇ யாரையோ வென்று இகந்து நின்றதுவே”1 |
(நற்றிணை-250) |
எனவரும். |
நோன்மையும் பெருமையும் மெய் கொள வருளிப் பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் தன்னினாகிய தகுதிக் கண்ணும் என்பது-பொறைமையும் பெருமையும் மெய்யெனக் கொள்ளுமாறு அருளி ஆராய்தல் அமைந்த வாயிலொடு பொருந்தித் தலைவன் தன்னான் ஆகிய தகுதிக் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. |
அருளிப் பொருந்திக்கூறும் எனக் கூட்டுக. எனவே தலைமகன் என்பதூஉந் தலைமகள் என்பதூஉம் எஞ்சி நின்றன. கூற்று என்றது அதிகாரத்தான் வந்தது. அஃதாவது பொறுத்தல் வேண்டும் எனவும் சிறுமை செய்தல் குற்றம் எனவும் கூறுதலும், தலைமகள் தன்னால் வந்ததனை என்னால் வந்தது எனவும் இவ்வாறு கூறுதல். பன்னல் சான்ற வாயிலாவது, நீ என் செய்தனை இவள் வெகுடற்குக் காரணம் என்னை, என ஆராய்தலிற் பொருந்திய தோழி என்க. பொருந்தலாவது வேறுபடாது உடம்படுதல். அவை வருமாறு: |
1. பொருள் : பாணனே! வருக. காலில் கிண்கிணி ஆர்ப்பத் தெருவில் நடை வண்டியால் நடக்கக் கற்றுக்கொள்ளும் என் மகனை அவன் வாய்நீர் என் மார்புச் சந்தனத்தைச் சிதைப்ப அணைத்தபடி, காமம் செலுத்தக் காதலியை முயங்கும் விருப்பத்தோடு அவளைக் குறுகினேமாக அவள் என் மார்புச் சந்தனம் சிதைந்ததற்குப் பரத்தையர் புணர்ச்சி என வேறாக எண்ணி வெகுண்ட மான்பிணை போல் நீ எமக்கு என்ன உறவுடையை (யார் நீ) என்று கூறி விலகி நின்றாள். அதை இப்போது எண்ணிச் சிரிப்போம் நாம். தானவட் பிழைத்த பருவத்தானும் என்பதைத் தனிக்கூற்றாகக் கொள்வர் நச். பார்க்க, பக், 49-50. |