பக்கம் எண் :

கற்பியல் சூ.545
 

இதனுள்   நலமென்றது இம்மூன்றினையும்.1 தலைவி  இல்லறப்  பகுதியை  நிகழ்த்துமாறு பல வகையாகக்
காணும்  தன்மை  உணர்வுடையோன்  ஓதிய  நூல்  விரியுமாறு  போல  விரியா  நின்றதெனவும், இவள்
கொடை  நலம்  வள்ளண்மை  பூண்டான்  பொருளனைத் தெனவும், இவளது  கற்புச்  சிறப்புப் பிறர்க்கு
அச்சஞ் செய்தலின் வாளனைத் தெனவும், தலைவன் அவளுரிமைகளை வியந்து கூறியவாறு காண்க.
  

நன்னெறிப்   படரும்   தொல்   நலப்  பொருளினும்-இல்லறத்திற்கு ஓதிய  நெறியின் கண் தலைவி
கல்லாமற் பாகம்பட ஒழுகுந் (பழ-6:4) தொன்னலஞ் சான்ற பொருளின் கண்ணும்.
  

பொருள்   வருவாய்  இல்லாத  காலமும்  இல்லற  நிகழ்த்துதல்  இயல்பாயிருத்தற்குத்  ‘தொன்னலம்’
என்றார்,
  

உதாரணம்
  

“குடநீரட்டுண்ணு மிடுக்கட் பொழுதும்
கடனீரற வுண்ணுங் கேளிர் வரினுங்
கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்”

(நாலடி-382)
  

இஃது     ஒரு குடம் நீராற் சோறமைத்து  உண்ணுமாறு மிடிப்பட்ட காலத்தும் மனைக்கு மாட்சிமை
யுடையாள்  கடல்  நீரை  வற்ற  உண்ணுங்கேளிர்  வரினும் இல்லற நிகழ்த்துதலைக் கைக்கு நெறியாகக்
கொள்ளுமெனத் தலைவன் வியந்து கூறினான்.
  

பெற்றதேஎத்துப்     பெருமையின் நிலைஇக் குற்றஞ் சான்ற பொருள் எடுத்து உரைப்பினும்-தலைவி
அங்ஙனம்   உரிமை  சான்ற  இடத்து  அவளைப்  பெருமையின்  கண்ணே  நிறுத்திக்  குற்றமமைந்த
களவொழுக்கத்தை வழுவியமைந்த பொருளாகக் கேளிர்க்காயினும் பிறர்க்காயினும் உரைப்பினும்.
  

அது   களவொழுக்கத்தையுந்  தீய  ஓரையுள்ளுந்2  துறவாது  ஒழுகிய குற்றத்தையும் உட்கொண்டும்
அதனைத் தீதென்னாமற் கூறுதலாம்.


1. மூன்று -அறிவு, கொடை, கற்புச் சிறப்பு
  

2. தீயஓரை-புணர்ச்சிக்குப் பொருந்தாத நாள்கள்.