உதாரணம் |
“நாலாறு மாறாய் நனிசிறிதா யெப்புறனு மேலாறு மேலுதை சோரினு-மேலாய வல்லளாய் வாழுமூர் தற்புகழு மாண்கற்பி னில்லாளமைந்ததேயில்”1 |
(நாலடி-383) |
இதனுள் மனைவி அமைந்து நின்ற இல் நிலையே இல்லறமாவதெனவே யாம் முன்னரொழுகிய ஒழுக்கமும் இத்துணை நன்மையாயிற்று என்றானாயிற்று. இது குறிப்பெச்சம். |
நாமக் காலத்து உண்டெனத் தோழி ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்; தோழி நாமக் காலத்து ஏமுறு கடவுள் உண்டென ஏத்திய மருங்கினும்-தோழி இன்னது விளையுமென்று அறியாது அஞ்சுதலையுடைய களவுக் காலத்தே யாம் வருந்தா திருத்தற்குக் காரணமாயதோர் கடவுள் உண்டு எனக்கூறி அதனைப் பெரிது மேத்திய இடத்துத் தலைவன் வதுவைகாறும் ஏதமின்றாகக் காத்த தெய்வம் இன்னுங்காக்குமென்று ஏத்துதலும்; அது, |
“குனிகா யெருக்கின் குவிமுகிழ் தாமரை முகத்தியைத் தந்தபாலே” |
என்னுங் குணநாற்பதில் ஏமுறு கடவுளைத் தலைவன் தானே ஏத்தியது போலாது, |
“நேரிழாய் நீயுநின் கேளும் புணர வரையுறை தெய்வமுவப்ப வுவந்து குரவை தழீஇயா மாடக் குரவையுட் கொண்டு நிலை பாடிக்காண்”2 |
(கலி-39) |
1. பொருள் : தங்குதற்குரிய வீடு எனப்படுவது யாது எனின், இடிந்ததால் நாலா பக்கமும் வழியுடையதாய், மிகச் சிறியதாய், கூரைமேல்வழியாகத் தன்மேல் மழைநீர் சோர்வதாக இருந்தாலும், மேல் நடக்க வேண்டியவற்றை ஆராய்ந்து செய்ய வல்லவளாய், தான் வாழும் ஊரார் தன்னைப் புகழும்படியான கற்போடு உள்ள மனைக் கிழத்தி அமர்ந்திருக்கும் வீடே வீடாகும். |
2. பொருள் : நேரிழையே! நீயும் நின் கணவனும் கூடியிருக்க மலைவாழ் தெய்வம் மகிழ விரும்பிக் குரவைக்கூத்து நாம் ஆட அக்கூத்துள் நீ தலைவனைக் காத்துக் கொண்டிருந்த நிலையை ஒருவர் முன்பாடப்பின் அதை நீ பாடிக் காண்பாயாக-தோழி கூற்று. |