இது, முன்வருங்காலத்து வாராது சிறந்தோன்பெயரன்1 பிறத்தலான் வந்தானெனத் தோழி கூறினாள். |
“குவளை மேய்ந்த குறுந்தாளெருமை குடநிறை தீம்பால் படூஉமூர புதல்வனை யீன்றிவ ணெய்யாடினளே” |
இதுவுமது, |
பயங்கெழு துணையணை புல்லிய புல்லாது உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப் புல்கு என முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய இரவினும்-தலைவி தனது ஆற்றாமை மிகுதியால் தழுவி ஆற்றுதற்குக் குளிர்ந்த பயன்கொடுத்தல் பொருந்திய பல அணைகளைத்தழுவி தன்னைப் புல்லுதல் பெறாதே வருந்திக் கிடந்த தலைவியை அணுகித் தான் கூடுதலைக் கருதின நிறையழிந்த காலத்தே அவளது மெத்தென்ற சிறிய அடியைத் தீண்டிய இரத்தற்கண்ணும். |
இதனானே மகப்பெறுதற்கு முன்னர் அத்துணை யாற்றாமை எய்திற்றிலனென்றார். இப்பிரிவு காரணத்தால் தலைவனும் நிறையழிவ னென்றார். |
“அகன்றுறையணிபெற” என்னும் மருதக்கலி (73) யுள் |
“என்னை நீ செய்யினு முணர்ந்தீ வாரில்வழி முன்னடிப் பணிந்தெம்மை யுணர்த்திய வருதிமன் னிரை தொடி நல்லவர் துணங்கையுட்டலைக் கொள்ளக் கரையிடைக் கிழிந்த நின் காழகம் வந்துரையாக்கால்’2 |
என இதனுட் சீறடிப் புல்லிய இரவினைத் தலைவி கூறியவாறு காண்க. தலைவன் கூற்று வந்துழிக் காண்க. |
1. சிறந்தோன் பெயரன் - சிறந்தவனாகிய தந்தைக்குப் பெயரன். |
2. பொருள் : நிரை தொடிப் பரத்தையர் ஆடும் துணங்கைக் கூத்தில் நீ சென்று தலைக்கைக் கொடுத்தலால் அவர் சிலம்பு மாட்டிக் கரையிடத்தே கிழிந்த நின் நீல ஆடை நினக்கு உட்பகையாய் வந்து நின் பரத்தைமையை எமக்கு உரையாதபோது, எப்படிப்பட்ட குறைகளை நீ செய்தாலும் இக்குறைகளைச் செய்தாயே என்று சொல்வார் இல்லாத விடத்து அடியில் பணிந்து எம்மை ஊடலுணர்த்த வருவாய் அதனாற் பயன் என்? |