பக்கம் எண் :

கற்பியல் சூ.563
 

நீர்மலி கதழ்பெய றைலஇய
வாய்நிறம் புரையுமிவண் மாமைக் கவினே”
1

(நற்-205)
  

இஃது இவள் நலனழியுமென்று செலவழுங்கியது.
  

“தேர்செல வழுங்கத் திருவிற்கோலி
யார்கலி யெழிலிசோர் தொடங்கின்றே
வேந்துவிடு விழுத் தொழிலொழிய
யான்றொடங்கினனானிற் புறந்தரவே”
2

(ஐங்குறு-428)
  

இஃது ஐயந் தீர்த்தது.
  

“ஈதலுந் துய்த்தது மில்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக்
கம்மா வரிவையும் வருமோ
வெம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே”
3

(குறுந்-63)
  

இது தலைவியை வருகின்றாளன்றே எனக் கூறிச் செலவழுங்கியது.
  

மீட்டு  வரவு  ஆய்ந்த வகையின் கண்ணும்-பிரிந்த தலைவன்  இடைச்சுரத்து  உருவு வெளிப்பட்டுழியும்
மனம் வேறுபட்டுழியும் மீண்டு வருதல் ஆராய்ந்த கூறுபாட்டின் கண்ணும்.


1. பொருள் : நெஞ்சமே!  மலையடுக்கத்தில் யாளியானது  புலியால்  அடிக்கப்பட்டு  இழுத்துவரப்படும்
களிற்றினை  இரையாக விரும்பித்தான்  இழுக்கும்படியான  கொடிய காட்டிடம்   என்று  நீ கருதாமல்
ஆள்வினை ஒன்றையே கருதிப் பிரிவாயாயின், மழை நீர் ஏற்ற இண்டின் மரத்தளிரினது கரிய அழகிய
நிறம் போலும் இவள் மாமையழகும்இன்றோடு போயிற்றாம். அதனால் பிரிவாயாயின் ஆராய்ந்து செய்க.
  

2. பொருள் : தேரானது செல்லுதலைத்  தவிரும்படி  ஒலிமிக்க மேகம்  மழை பொழியத்  தொடங்கியது.
அதனால்  வேந்தன்  ஏவிய  சிறந்த தொழில் தவிர்ந்தது. அதனால் யான் நின்னைப் புறந்தருதலாகிய
தொழிலைத் தொடங்கினேன்.
  

3. பொருள் : நெஞ்சே! பிறர்க்குக் கொடுத்தலும் தாம்  இன்பம்  துய்த்தலும் ஆகிய இரண்டும் பொருள்
இல்லாதார்க்கு இல்லை எனக் கருதிப் பொருள்  செய்வினைக்கு  விருப்பம் மிக எண்ணுகிறாய். அப்படிச்
செய்வினைக்கு அகல்வாயாயின் நம் காதலியும் உடன் வருமோ. வாராளாயின் என்னை மட்டும் போகத்
தூண்டுவையோ? கூறுக.