இதன் பொருள்: கற்பொழுக்கம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாதெனின், கொள்ளுதற்காம் மரபினை உரிமையாகவுடைய ஒருவன், தன்னால் மணந்து கொளற்கு உரிமை பொருந்திய ஒருத்தியைக் கொடுத்தற்குரிய மரபினையுடைய தந்தையர் தன்னையர் முதலியோர் திருமண விதிமுறைப்படிப் பொருந்தக் கொடுக்க மணம் செய்து கொண்டு ஒழுகும் ஒழுக்கமாகும். |
கற்பு என்பது கற்றலையும் கற்பித்தலையும் குறிக்கும். எனவே கற்பு என்பது கிழவனும் கிழத்தியும் தாம் கற்றவாறும் பிறர் தமக்குக் கற்பித்தவாறும் ஒழுகும் ஒழுக்கம் ஆகும். தாம் கற்றவாறு ஒழுகலாவது நூலைக் கற்றவாறும் பிறர் வாழ்க்கை கண்டு கற்றவாறும் ஒழுகல். பிறர் கற்பித்தவாறு ஒழுகலாவது கிழவன் கற்பித்தவாறு கிழத்தி ஒழுகலும் இருவரும் தந்தையர் தன்னையர் சான்றோர் முதலியோர் கற்பித்தவாறு ஒழுகலும் ஆம். |
கிழவனும் கிழத்தியும் தாம் கற்றவாறும் பிறர் கற்பித்தவாறும் ஒழுகுவது இல்லிருந்து ஆதலின் இல்லிருந்து அவ்வாறு ஒழுகும் வாழ்க்கை இல்வாழ்க்கை எனப்படும். அதனால் கற்பொழுக்கம் என்பது இல்வாழ்க்கையைச் சிறப்பாகக் குறிக்கும். எனவே இல்வாழ்க்கை நிகழ்ச்சிகளே கற்பியலிற் கூறப்படும் என்க. |
ஒவ்வொன்றற்கும் விதிமுறைப்படிச் செய்யும் செயல் கரணம் எனப்படும். அதனைச் சடங்கு என்றனர் பிற்காலத்தார். |
கொளற்குரிய மரபாவது பிறப்பு குடிமை முதலியவற்றால் கிழத்தியோடு ஒத்தும் அல்லது மிக்கும் அமைந்த முறைமை. களவின் வழிவந்தாராயின் கிழத்தியை மணந்தேயாக வேண்டும் என்னும் முறைமை. |
கொளற்குரிய மரபுடையவனைக் கிழவன் என்றதற்கு ஏற்பக் கிழத்தி என்பதும் கொளப்படற்குரிமையுடையாள் என்பதை உணர்த்தும். |
புறனடை |
141. | கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலையான | (2) |