அருந்தொழின் முடித்த செம்மற்காலை விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும்-செயற்கு அரிதாகிய வினையை முடித்த தலைமையை எய்திய காலத்தே தலைவி விருந்தெதிர் கோடலோடே நீராடிக் கோலஞ் செய்தல் முதலியவற்றைக் காண்டல் வேண்டிய இடத்தும் தலைவன் கூற்று நிகழ்த்தும், |
உதாரணம் |
“முரம்புதலை மணந்த நிரம்பாவியவி னேங்கித்தோன்று முமண்பொலி சிறுகுடிக் களரிப்புளியிற் காய்பசி பெயர்ப்ப வுச்சிக் கொண்ட வோங்குடைவம்பலீர் முற்றையுமுடையமோ மற்றேபிற்றே வீழ்மா மணிய புனைநெடுங் கூந்த னீர்வார் புள்ளி யாக நனைப்ப விருந்தயர் விரும்பினள் வருந்துந் திருந்திழையரிவை தேமொழி நிலையே”1 |
(நற்றிணை-374) |
என இதனுள் விருந்தயர் விருப்பினளென விருந்தொடு நல்லவை வேட்டுக் கூறியவாறு காண்க. |
மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும் கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்ணும்-வினை முற்றிப் புகுந்த தலைமகனை எதிரேற்றுக் கொள்ளும் மங்கல மரபினர் மாலையேந்திய பெண்டிரும் புதல்வருங் கேளிரும் ஆகலான் அக்கேளிர் செய்யும் எதிர்கோடலொழுக்கத்துக் கண்ணும், தலைமகன் உள்ள மகிழ்ந்துரைக்கும். |
உம்மை விரிக்க, பெண்டிரும் மக்களுமாகிய கேளிரென்றுமாம். |
1. பொருள் : பரல் நிரம்பிய சென்றுமுடியாத வழியில் உள்ள உமணர் சிறுகுடியில் களர் நிலத்து விளைந்த புளிச்சுவையுடைய உணவுண்டு பசி தீர்ந்து உச்சியில் குடைபிடித்தவராய்ச் செல்லும் புதியவர்களே! எம் காதலியைப் பிரிந்துவந்த பிற்காலத்தில் யாம் வினைமுற்றி மீளுவதறிந்து நீலமணி போலும் கூந்தலினின்றும் நீராடியமையால் நீர்த் துளிகள் வீழ்ந்து உடம்பை நனைப்ப எமக்கு விருந்தயரும் விருப்பத்தோடு அட்டில் அமைக்க வருந்தும் அவளது நிலையை முற்காலத்து யாம் அறிதலுடையேமாய் இருந்தோமோ இல்லையோ. இப் பிற்காலத்து உடையே மாயினேம். |