அவ்விடத்து வரும் பலவாய் வேறுபட்டுவரு நிலையினும் தலைவி கூற்று நிகழும் என்றவாறு. தோழிக்குரியவை என்றதனால் தோழிக்குக் கூறத்தகாதனவும் உள என்று கொள்க. |
உதாரணம் |
“நன்னலந் தொலைய நலமிகச்சாஅய் இன்னுயிர் கழியினும் உரையல் அவர் நமக் கன்னையும் அத்தனும் அல்லரோ தோழி புல்லிய தெவனோ அன்பிலம் கடையே”1 |
(குறுந்-93) |
இது காய்தல் பற்றி வந்தது. |
“நாமவர் திருந்தெயி றுண்ணவும் அவர் நமது ஏந்துமுலை யாகத்துச் சாந்து கண்படுப்பவுங் கண்டுசுடு பரத்தையின் வந்தோற் கண்டும் ஊடுதல் பெருந்திரு உறுகெனப் பீடுபெறல் அருமையின் முயங்கியேனே”2 |
எனவும், |
“காணுங்கால் காணேன் தவறாய காணாக்காற் காணேன் தவறல்லவை.”3 |
(குறள்-1286) |
எனவும் இவை உவத்தல் பற்றி வந்தன. |
|
1. பொருள் : தோழீ! அவரது பரத்தமை காரணமாக நல்ல அழகு கெட்டு உயிர் போவதாயினும் அவரிடம் நாம் புலந்துள்ளோம் எனக் கூறாதே. ஏன் எனின் அவர் நமக்கு அன்னையும் தந்தையும் போன்ற அன்பினர். அன்றியும் அவர் நம்மாட்டு அன்பிலராயின் நாம் புலந்து கொள்வதாலும் பயன் இல்லை. |
2. பொருள் : தோழீ! நாம் அவர் எயிறு சுவைக்கவும் அவர் நமது முலை மார்பத்தைச் சந்தனம் படத்தழுவவும் கண்டு சுடுசொல் சொல்லிய பரத்தையினின்று வந்த அவரைக் கண்டு நம் ஊடல் சிறப்புறுவதாக என எண்ணின் அவரையடையும் பெருமை நம்மாற் பெறற்கு அரிதாகிவிடும் ஆதலின் யாதும் ஊடாமல் முயங்கினேன். |
3. பொருள் : தோழீ! தலைவனைக் காணும்போது அவரிடம் தவறுகள் உள்ளனவாகக் காணேன். அவரைக் காணாதபோது அவரிடம் தவறல்லாதனவற்றைக் காணேன் என்ன வியப்பு! |