சிவ. |
இச்சூத்திரம் பாசறைக்கண் அழைத்துச் செல்லப்படும் மகளிராவார் யார் என்பது கூறுகின்றது. |
இ-ள் : அகவொழுக்கத்துக்குரியரல்லாதோர் பாசறைக்கண் அழைத்துச் செல்லப்படுதல் பொருந்துவதாகும். |
இது பெரும்பாலும் அரசரை நோக்கிக் கூறியதாம். சிறுபான்மை வீரரை நோக்கிக் கூறியதாகவும் கொள்க. புறத்தோராவார் அரசர்க்குப் போரில் விருப்பமும் ஊக்கமும் ஊட்டும் விறலியர், கூத்தியர் முதலிய தொழிலினர். அரசர் போர்மேற் செல்லும்போது அவர்களும் உடன்சென்று ஊக்குவிப்பர். வீரருள்ளும் மறக்குடி வீரராயின் தம் வீரத்தை ஊக்குவிக்கும் விறலியர் துடிமகளிர், கிணை மகளிர் போல்வாரை உடன் அழைத்துச் செல்வர். அவர்கள் புண்பட்ட வீரர்களைப் புண்ணை ஆற்றுதலும் செய்வர். |
“புறத்திணைப் பணிகளுக்குரிய பெண்டிராயின் பாசறையில் தங்கியிருத்தல் பொருந்துவதாகும் என்பர் ஆசிரியர் என்றவாறு” |
என வெள்ளைவாரணனார் எழுதியவுரையும் இக்கருத்துடையதேயாம். |
புறப்பெண்டிர்ப் புணர்ச்சி அதாவது தாதியரொடும் கணிகையரொடும் புணரும் புணர்ச்சி பாசறைக்கண் பொருந்தும் என இளம்பூரணர் கூறுவது அத்துணைச் சிறப்புடையதன்று. உலகியலில் இப்புணர்ச்சி நிகழ்வதுண்டு என்பதை அவர் மனங்கொண்டு கூறியதாகும் அது. |
அகப்புறத் தலைவராகிய அடியோரும் வினைவலரும் ஆகியவர்பற்றிய புலனெறி வழக்காயின் மகளிரொடு பாசறைக் கண் புணர்வதாகச் செய்யுள் செய்யலாம் என நச்சினார்க்கினியர் கூறியதும் ஏற்புடையதன்று. புலனெறி வழக்கொன்று மட்டுமே நோக்கியதன்று இச் சூத்திரம். பாசறையில் பெண் புணர்வு சிறந்த வீரர்க்கு ஆகாது என்பதைக் குறித்தனவே இச் சூத்திரமும் மேலைச் சூத்திரமும் ஆதலின். |