பக்கம் எண் :

கற்பியல் சூ.33255
 

(இ-ள்) : தலைவனுக்கு  உளதாகும்  ஒழுக்கக்  குறைகளைப்  பிறர்  அறியாமல்  காத்துப்   போற்றுதல்
தலைவி கடப்பாடு ஆதலினாலும் அவன் தனக்குப் பணித்த  மொழிப்படி  நடத்தல்  இயல்பு  ஆதலினாலும்
என்  மகனுக்கு  நீயும்   தாய்   எனக்  காமக்கிழத்தியை   உயர்த்துதலும்  தன்   உயர்குணச்  சிறப்பாகும்
என்றவாறு.
   

முன்னைய  சூத்திரம்  காமக்கிழத்தியைத்  தலைவி  தாய்போல்  தழுவிக்   கோடலைக்  கூறியதாதலின்
இச்சூத்திரம் அதன் காரணம் கூறுதல் நுதலிற்று என இளம்பூரணர் கூறுவது பொருந்துவதேயாம்.
  

மகன்   தாய் உயர்பு  தன்உயர்பு  என்பனவற்றுக்கு  நச்சினார்க்கினியர், நீயும் இம்மகனுக்குத் தாயாவாய்
என  இளையாளை  நோக்கிக்  கூறும்  உயர்பு  மூத்தாளாகிய   தலைவியின்   உயர்பாகும்  என   முதல்
மனைவியின்  செயலாகவும்,  மகனுக்குத்   தாயாகிய   மூத்தாளை உயர்த்திப்  போற்றுவது  இளையாளாகிய
தன்  உயர்பாகும்  என  இளைய  மனைவியின்  செயலாகவும் இருவகையில்  உரை கூறி இரண்டும் ஏற்கும்
என்பர்.  மணந்து  கொள்ளப்பட்ட  இருவரும்   ஒருவரையொருவர்   உயர்த்துதலினும்    மணந்தமனைவி
மணவாக்  காமக்கிழத்தியை  நீயும்  மகன்  தாய்     என  உயர்த்துதல்   சிறப்பாதலின் நச்சினார்க்கினியர்
சிறப்புடையதாகாது பொருந்துவதாயினும்.
  

வெள்ளைவாரணனார்,
  

“தலைவனது     வாழ்க்கையிற் சோர்வு  பிறவாமற்  காத்தல் வாழ்க்கைத் துணைவியாகிய  மனைவியின்
கடமையென்று  நூல்களிற்  கூறப்படுவதால்   தாய்   போன்று  தலைவனை  இடித்துரைக்கும்  உயர்வினை
மகனை   பெற்ற   தலைவி   பெற்றிருந்தாலும்  தலைவனது   உயர்ச்சியாகவே   கருதப்பெறும்.  எல்லாச்
செல்வங்களுக்கும்     உரிமையுடையவனாகிய    தலைவன்   தன்பால்    அன்புடையார்கண்    பணிந்த
மொழியினனாக ஒழுகுதல்  அவனுக்குரிய இயல்பாகலான்” என்று  உரை கூறுவர்.  தலைவன்  யாவரிடத்தும்
பணிந்த  மொழியினன்  ஆதலின்  தலைவியின்  இடித்துரை  முறையானது என  எண்ணி  அதை  ஏற்றுப்
பணிந்தவனாதலால் அவனுக்கு உயர்பையே தரும் என்ற  கருத்தில் உரை  கூறினார்  போலும்.  வெறுக்கும்
மனநிலையை  இயல்பாகவுடையவர்  உயர்த்துதலே  உயர்குணத்தின்பாற்படும்  ஆதலின்  காமக்கிழத்தியைத்
தலைவி உயர்த்துதலே உயர்பாகும் என்னும் உரையே சிறப்புடையதாம்.