இளம். |
இதுவும் அது. |
இ-ள்: வேந்துறு தொழிலாவது பகைதணி வினை. வேந்தற்குற்றவழி தூது காவல்1 என அவ்வழிப் பிரிவிற்கும் ஆண்டினது அகமே காலம் என்றவாறு. |
எனவே அறுதிங்கள் முத்திங்கள் எல்லாம் கொள்ளப்படும். |
நச் |
இது, வரையறையுடைமையிற் பகைவயிற் பிரிவிற்கு வரையறை கூறுகின்றது. |
இதன் பொருள்: வேந்து உறுதொழிலே-இருபெரு வேந்தருறும் பிரிவும், அவருள் ஒருவற்காக மற்றொரு வேந்தனுறும் பிரிவும், யாண்டினது அகமே-ஓர்யாண்டினுட்பட்டதாம் என்றவாறு. |
‘வேந்துறு தொழில்’ என்பதனை இரட்டுறமொழிதல் என்பதனான், வேந்தனுக்கு மண்டிலமாக்களுந்தண்டத் தலைவரு முதலியோர் உறும் பிரிவும் ‘யாண்டினதகம்’ எனவும் பொருளுரைக்க. ‘தொழில்’ என்றது அதிகாரத்தாற் பிரிந்து மீளும் எல்லையை. அது ‘நடுவுநிலைத்திணையே நண்பகல் வேனிலொடு’ (9) என்பதனாற் பிரிவிற்கோதிய இருவகைக் காலத்துள்ளும் முதற்கணின்ற சித்திரை தொடங்கித் தையீறாகக் கிடந்த பத்துத் திங்களுமாம். இனிப்பத் தென்னாது, யாண்டென்றதனாற் ‘பின்பனிதானும்’ (10) என்பதனாற் கொண்ட சிறப்பில்லாத பின்பனிக்குரிய மாசி தொடங்கித் தையீறாக யாண்டு முழுவதூஉங் கொள்ளக்கிடந்த தேனும் அதுவும் பன்னிரு திங்களுங்கழிந்ததன்மையின் யாண்டினதகம் ஆமாறுணர்க. இதற்கு இழிந்த எல்லை வரைவின்மையிற் கூறாராயினர். அது, |
“இன்றே சென்று வருவது நாளைக் குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக”2 |
(குறுந்-184) |
எனச் சான்றோர் கூறலின். |
1 தூது காவல் இவ்விரண்டும் ‘ஏனைப் பிரிவும் அவ்வியல் நிலையும்’என அடுத்துவரும் சூத்திரத்தில் அடங்குமாதலின் இங்குக் கூறப்பட வேண்டுவதில்லை. |
2 பொருள்: வலவ! இன்றே சென்று நாளையே நாம் வருவதாகும். அதனால் மலையிலிருந்து இழியும் அருவி போல வெள்ளிய தேரானது விரைந்து செல்க. |