“நிலநாவிற்றிரிதரூஉ நீண்மாடக் கூடலார் புலநாவிற் பிறந்தசொற் புதிதுண்ணும் பொழுதன்றோ பலநாடு நெஞ்சினேம் பரிந்துநாம் விடுத்தக்காற் சுடர்நுதா னமக்கவர் வருதுமென் றுரைத்ததை”1 |
(கலி-35) |
இது, பின்பனியிற் பிரிந்து இளவேனிலுள் வருதல் குறித்தலின் இருதிங்கள் இடையிட்டது.2 |
“கருவிக் காரிடி யிரீஇய பருவமன்றவர் வருது மென்றதுவே”3 |
(அகம்- 139) |
இது, கார் குறித்து வருவலென்றலின் அறுதிங்கள் இடையிட்டது. |
‘வேளாப் பார்ப்பான்’ (அகம்-24) என்பது ‘தைஇ நின்ற தண்பெயற் கடைநாட்... பனியிருங் கங்குல்’ என்றலின் யாண்டென்பதூஉம், அது கழிந்த தன்மையின் அஃது அகமெனவும் பட்டதென்பதூஉம் தலைவன் வருதுமென்று காலங் குறித்ததற்கொத்த வழக்கென்றுணர்க. காவற் பிரிவும் வேந்துறு தொழிலெனவே அடங்கிற்று.4 தான் கொண்ட நாட்டிற்குப் பின்னும் பகையுளதாங்கொலென்று உட்கொண்டு காத்தலின். |
1 பொருள்: விளங்கிழாய்! பிரிந்தவர் வருமளவும் ஆற்றியிருப்போமோ இறந்துபடுவோமோ எனப் பலவாறாக நாடும் நெஞ்சம் வருந்த அவரைப் பிரிந்து செல்லவிடுத்தபோது அவர்மீண்டு வருவதாகக் குறித்த காலம், உலகத்தார் நாவிற் புகழ்ந்து பேசப்படும் மதுரையில் உள்ள மக்கள், புலவர் நாவிற் பிறக்கும் புதிய பாடல்களை நுகரும்படியான இளவேனிற் காலமன்றோ? |
2 பாலைக்குப் பின்பனிக்காலம் உரியது. ஆதலின் இவ்வாறு கூறினார். அடுத்த கார்ப்பருவம்பற்றியதையும் இவ்வாறே கொள்க. |
3 பொருள் : தலைவன் மீண்டு வருவேம் என்று குறித்துக் கூறிய மின்னல் தொகுதியுடைய இடியுடன் இருத்தப்பட்ட கார்ப்பருவம் அன்று இப்பருவம். |
4 காவற் பிரிவை வேந்துறு தொழிலில் அடக்குதலினும் ‘ஏனைப் பிரிவு’ என அடுத்துவரும் சூத்திரத்தில் கொள்வது நன்று. |