(இ-ள்) : தோழி-அன்பாற் சிறந்த தோழியும், தாய்-அவளே போலுஞ் செவிலியும், பார்ப்பான்-அவரின் ஆற்றலுடைய பார்ப்பானும், பாங்கன்-அவரே போலும் பாங்கனும், பாணன்-பாங்குபட்டொழுகும் பாணனும், பாடினி-தலைவி மாட்டுப் பாங்குபட்டொழுகும் பாடினியும், இளையர்-என்றும் பிரியா இளையரும், விருந்தினர்-இருவரும் அன்பு செய்யும் விருந்தினரும், கூத்தர்-தலைவற்கு இன்றியமையாக் கூத்தரும், விறலியர்-தாமே ஆடலும் பாடலும் நிகழ்த்தும் விறலியரும், அறிவர்-முன்னே துறவுள்ளத்தராகிய அறிவரும், கண்டோர்-அவர் துறவு கண்டு கருணை செய்யுங் கண்டோரும், யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப- இந்தத் தலைவனுந் தலைவியும் பெற்ற துறவின் கண்ணே மனம் பிணிப்புண்ட சிறப்பினையுடைய வாயில்களென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |