9.பாடாண்படலம் (இ - ள்.) ஒழுங்குவிடும் மூன்று இலைத்தொழிலாற் பொலிந்த சூலத்தினையும் கூற்றம்போன்ற குந்தாலியினையும் நறுநாற்றமிகும் இதழியினையுமுடைய இறைவன் காப்ப நெடுங்காலம் நிலவலயத்துப் பொலிவுமிக்க நாவலந்தீவிடத்து அண்டமுருவிப் போய்நின்ற மாமேருவென்னும் பெரிய மலைபோலநின்று நிலைப்பாயாக எ-று. நாவலந் தீவிடத்து மன்னுவாயாகவெனக்கூட்டுக. பூமியில் ஒருகூறு நாவலந்தீவு. (38) 227. கொடிநிலை மூவர்கொடி யுள்ளு மொன்றொடு பொரீஇ மேவரு மன்னவன் கொடிபுகழ்ந் தன்று. (இ - ள்.) அரி அயன் அரனென்னும் மூவர்கொடியுள்ளும் ஒன்றோடு உவமித்துப் பலரும் பொருந்துதல்வரும் வேந்தனுடைய கொடியைப் புகழ்ந்தது எ-று.
(வ - று.)1பூங்க ணெடுமுடிப் பூவைப்பூ மேனியான் 2பாம்புண் பறவைக் கொடிபோல -ஓங்குக பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க் கொல்யானை மன்னன் கொடி. (இ - ள்.) பொலிந்த கண்ணினையும் நெடிய திருமுடியினையும் காயாவின் மலர் போன்ற திருமேனியினையுமுடைய மாயவன் பாம்பை யருந்தும் கருடக்கொடியை யொப்பஉயர்க; பலவாரணத்தையுடைய வேந்தர் வணங்கக் குளிர்ந்த பூவாற்செய்த மாலையினையும் கொல்லுங்களிற்றினையுமுடைய வேந்தன்றன் வீரக்கொடி. வீரக்கொடி ஓங்குகவென்க. (39) 228. கந்தழி சூழநேமியான் சோவெறிந்த வீழாச்சீர் விறன்மிகுத்தன்று. (இ - ள்.) வளைந்த திகிரியையுடையவன் சோவென்னும்அரணத்தினை அழித்த கெடாத தன்மையினையுடைய வெற்றியைச்சிறப்பித்தது எ - று. (வ - று.)3மாயவன் மாய மதுவான் மணிநிரையுள் ஆயனா வெண்ண லவனருளான் -காயக் கழலவிழக் கண்கனலக் கைவளையார் சோரச் சுழலழலுள் வைகின்று சோ. (இ - ள்.) கரியவன் வஞ்சம் அவ்வகையால்; மணியையுடைய ஆனிரையிடத்துக் கோவலனாக எண்ணாதேகொள்; அவன் அளியானாகிக் கோபிக்க அசுரர் கட்டின வீரக்கழல் நெகிழ விழியழலக் கையில் தொடியுடைய மகளிர்கள் மயங்கச் சுற்று நெருப்புள்ளே தங்கினது, 4சோவென்னும்அரண் எ-று. (40)
1. தொல், புறத். சூ. 27, இளம். மேற்; சூ.31, ந. மேற். 2. முருகு. 150-51; பரி . 4:41-2. 3. தொல். புறத். சூ. 22, இளம். மேற். 4. பு.வெ. 101; நான்மணி. கடவுள்; சிலப். 17: "மூவுலகும்" ;கூர்ம. சுவேதவராக. 5. |