பக்கம் எண் :

வருவான்கொல் வந்தென் வனமுலைமேல்வைகித்
தருவான்கொன் மார்பணிந்த தார்.

(இ - ள்.) சிறுதுவலை துவற்றும் கார் என்னெஞ்சைக் கொள்ளமயக்கத்தைச் செய்யும் மாலைப்பொழுதிலே தனியேநின்றேற்கு மிகும் ஒழுக்கத்தினையுடைய நீராற் சிறந்தநாடனாகிய சோழன் இரவுப்பொழுதிடத்து வருவான்கொல்? வந்து என்னுடைய அழகிய கொங்கை மேலே தங்கித்தருவான்கொல், மார்பினணிந்த மாலையை? எ-று.

(45)

234. பெருந்திணை

பெய்கழற் பெருந்தகை பேணா முயக்கிவர்ந்து
மல்கிருட் செல்வோள் வகையுரைத் தன்று.

(இ - ள்.) இட்ட வீரக்கழலினையும் மிக்க தலைமையினையுமுடையவன் விரும்பாத புல்லுதலை வேட்டுமிக்க இருட்காலத்துப் போமவளது தன்மையைச் சொல்லியது எ-று.

(வ - று.) வயங்குளைமான் றென்னன் வரையகலந்தோய
இயங்கா விருளிடைச் செல்வேன் -மயங்காமை
ஓடரிக் கண்ணா யுறைகழிவாண் மின்னிற்றால்
1மாட மறுகின் மழை.

(இ - ள்.) விளங்கும் தலையாட்டத்தால் அழகுபெற்ற குதிரையினையுடைய பாண்டியனது வரைபோன்ற மார்பைத்தழுவ ஒருவரும் நடக்கத்தகாத செறிந்த இருளிடத்துப்போவேன் மருளாதபடி, செவ்வரி கருவரி பரந்த கண்ணினையுடையாய், உறைநீக்கின வாள்போல மின்னிற்று, மாளிகையான் மிக்கதெருவிலே மேகம் எ-று.

ஆல்: அசை

(46)

235. புலவிபொருளாகத்தோன்றியபாடாண்பாட்டு

வில்லேர் நுதலி விறலோன் மார்பம்
புல்லேம் யாமெனப் புலந்துரைத் தன்று.

(இ - ள்.) விற்போன்ற நெற்றியினையுடையாள் வீரன்றன் அகலத் திடத்தைத்தழுவேம் யாமென்று ஊடிச்சொல்லியது.

(வ - று.)2மலைபடு சாந்த மலர்மார்பயாநின்
பலர்படி செல்வம் படியேம் - புலர்விடியல்
வண்டினங்கூட் டுண்ணும் வயல்சூழ் திருநகரிற்
கண்டனங் காண்டற் கினிது.

(இ - ள்.) மலையகத்துண்டான சந்தனத்தையுடைய அகன்ற மார்பனே, யாங்கள் நின்னுடைய பரத்தையர்பலரும் தோயும் சம்பத்தைத் தோயேம்; பொழுது புலரும் விடியற்காலத்தே சுரும்பினங்கள் புணர்ந்து நுகரும்பழனஞ் சூழ்ந்த செல்வப்பதியிலேகண்டேம்; நோக்குதற்குஇனிதாயிருந்தது எ-று.


1. முருகு. 71; பரி. 20; 25. 2. தொல். புறத். சூ. 22, இளம், மேற்.