பக்கம் எண் :

(இ - ள்.) காலிலே நிறைந்த வீரக்கழலினையுடையார், கொடிய வில்லினையுடையார், கையிலேயெடுத்த வேலினையுடையார், அஞ்சத்தக்க காட்சியினையுடையார், கூற்றுவன் கோபித்தாலுமொப்பார், தடாரி யோசையைக் கேட்டு அசைந்தார்; வெட்சியார் கொண்ட ஆனிரை மீள்கையும் கூடும் எ - று.

(2)

24. அதரிடைச் செலவு

ஆற்றா ரொழியக் கூற்றெனச் சினைஇப்
போற்றார் போகிய நெறியிடை யேகின்று.

(இ - ள்.) செருவினைப் பொறாதார் ஊரிலே நிற்கக் காலனை யொப்பக் கோபித்துப் பகைவர்போன வழியிடத்தே சென்றது எ - று.

வ - று. சங்குங் கருங்கோடுந் தாழ்பீலிப் பல்லியமும்
எங்கும் பறையோ டெழுந்தார்ப்ப - வெங்கல்
அழற்சுரந் தாம்படர்ந்தா ரான்சுவட்டின் மேலே
நிழற்கதிர்வேன் மின்ன நிரைத்து.

(இ - ள்.) சங்கும் கரிய வீரக்கொம்பும் தாழ்ந்த பீலியையுடைய சில விசேட வாச்சியங்களும் பறையோடு எங்கும் எழுந்து ஆரவாரிப்ப வெவ்விய கல்லினையுடைய அழல்பரந்த காட்டிலே தாம் போயினார், நிரைபோன அடிப்பாடே, நிழல்விடும் சுடர்வேல் ஒளிவிட நிரைத்து எ - று.

(3)

25. போர் மலைதல்

1வெட்சி யாரைக் கண்ணுற்று வளைஇ
உட்குவரத் தாக்கி 4யுறழ்செருப் புரிந்தன்று.

(இ - ள்.) வெட்சியாரைக் கிட்டிச் சூழ்ந்து அஞ்சத்தாக்கி எடுப்பும் சாய்ப்புமான பூசலை மேற்கொண்டது எ - று.

வ - று.2புலிக்கணமுஞ் சீயமும் போர்க்களிறும் போல்வார்
வலிச்சினமு மானமுந் தேசும் - ஒலிக்கும்
அருமுனை வெஞ்சுரத் தான்பூசற் கோடிச்
செருமலைந்தார் சீற்றஞ் சிறந்து.

இ - ள். புலியினதுதிரளும் சிங்கமும் போர்பொரும் யானையு மொப்பார், வலிமிக்க சீற்றமும் அபிமானமும் பெருமையும்; ஆரவாரிக்கும் கிட்டுதற்கரிய பகைப்புலவழியிலே நிரைகொண்டார் வெட்சியாரென்னும் ஆரவாரத்தாற் கடுகிப் பூசலைச்செய்தார், கோபமிக்கு எ - று.

சிறந்து செருமலைந்தாரென்க.

(4)

26.3புண்ணொடு வருதல்

மண்ணோடு புகழ்நிறீஇப்
புண்ணோடுதான் வந்தன்று.


1. புறநா. 259, உரை, மேற். 2. தொல். புறத். சூ. 5, இளம். மேற். 3. தொல். புறத். சூ. 5, இளம். (பி-ம்) 4. யுளர்செருப்'