(இ - ள்.) கையைவிட்டுப் போவனவாக, திரண்டதொடியும்; ஊரிலுள்ளாரும் பழிதூற்றுக; இதழ்விரியுந் தாழை நீர்த் துறையெல்லாம் மணம் நாறச் சங்குபோல் மலரும் பொலிந்தகடற்கானலையுடைய சேர்ப்பன் தனிமை கொண்ட மயக்கமுடைத்தான மாலைக் காலத்துப் போகான், என் நெஞ்சிடத்து நிலைபெற்று எ-று. (3) 309. வரவெதிர்ந்திருத்தல் முகைபுரை முறுவன் முள்ளெயிற் றரிவை வகைபுனை வளமனை வரவெதிர்ந் தன்று. (இ - ள்.) முல்லையரும்பன்ன நகையாற் சிறந்த கூரிய பல்லினையுடைய மடவாள் பல கூறுபடக் கைசெய்த செல்வமனையிடத்தே தலைவன் வருதலை ஏற்றிருந்தது எ-று. வ - று. காம நெடுங்கட னீந்துங்காற்கைபுனைந்த பூமலி சேக்கைப் புணைவேண்டி - நீமலிந்து செல்லாய் சிலம்பன் வருதற்குச் சிந்தியாய் எல்லாக நெஞ்ச மெதிர். (இ - ள்.) ஆசையாகிய பெரிய கடலை நீந்துமிடத்துக் கைசெய்யப் பட்ட மலர்மிக்க சயனத்திடத்துக் கூட்டமாகிய தெப்பத்தை வேண்டி நீ விரைந்து போகாய்; தலைவன் இவ்விடத்து வருவதற்கு நினையாய்; நீ மயக்கம் நீங்கி விளக்கமுற என் நெஞ்சே, எதிரே எ-று. எதிர் செல்லாயென்க. (4) 310. வாராமைக்கு அழிதல் நெடுவேய்த் தோளி நிமித்தம் வேறுபட வடிவே லண்ணல் வாராமைக் கழிந்தன்று. (இ - ள்.) உயர்ந்த மூங்கிலன்ன தோளினாள், சொகினவிகற்பத்தாலே வடித்த வேலினையுடைய தலைவன்வாராதொழிய அதற்கு அழிந்தது எ-று. வ - று. நுடங்கருவி யார்த்திழியுநோக்கருஞ் சாரல் 1இடங்கழி மான்மாலை யெல்லைத் - தடம்பெருங்கண் தாரார மார்பன் றமியே னுயிர்தளர வாரான்கொ லாடும் வலம். (இ - ள்.) அசையும் மலையருவி ஆரவாரித்து விழும் பார்ப்பதற்கரிய மலைப்பக்கத்து இராகவேகத்தையுண்டாக்கும் மயக்கமுடைய மாலையளவிலே மிகப்பெரிய கண்ணானது, மாலையாற் சிறந்த ஆரமார்பன் தனியேனுடைய உயிர்மெலிய வாரான் போலும், வலம் துடியாநின்றது எ-று. தடம்பெருங்கண் வலமாடுமென்க. (5)
1. சிலப். 10: 219-20, அடியார்.; மணி. 10 : 22, 18 : 119. |