12. பெருந்திணைப்படலம் (இ - ள்.) இற்றைநாள், இந்த நினைவுடனே யான் பழக ஐந்தம்பினையுடைய காமன் வெற்றிக்கொடியை உயர்த்தானாம்; அம்பலத்திலே ஒப்பில்லாத மடப்பத்தினையுடைய மானன்ன பார்வையாள்தன் மிக்க அழகைக் கொண்டாடிவளைந்த பனைமடலாலாகிய குதிரையைப் பண்ணி அதன்மேல் ஏறி எ-று. ஏறி இன்று இப்படரோடு யானுழப்ப ஐங்கணையான் வென்றிப் பதாகை எடுத்தானாம். (2) 327. தூதிடை யாடல் ஊழி மாலை யுறுதுயர் நோக்கித் தோழி நீங்கா டூதிடை 1யாடின்று. (இ - ள்.) உகம்போன்ற மாலைக்காலத்துத் தலைவியுற்ற துன்பத்தைப் பார்த்துத் தோழி விட்டுநீங்காளாய்த் தலைவனிடத்தே தூதாகி நடந்தது எ-று. வ - று. வள்வாய்ந்து பண்ணுக திண்டேர்வடிக்கண்ணாள் ஒள்வாள்போன் மாலை யுயல்வேண்டும் - கள்வாய தாதொடு வண்டிமிருந் தாம வரைமார்ப தூதொடு வந்தேன் றொழ. (இ - ள்.) வாரை ஆராய்ந்து பண்ணுறுத்து, திண்ணியதேரினை; வடுப் பிளவன்னவிழி யினையுடையாள் ஒள்ளியவாள்போலும் கொடிய மாலைக்காலத்துப் பிழைத்தல் வேண்டும்; தேனை இடத்திலேயுடைய பூவுடனே சுரும்பு ஆர்க்கும் மாலையினையுடைய மலைபோலு மார்பனே; நினை வணங்கத் தூதாகி வந்தேன் எ-று.
(3) 328. துயரவற் குரைத்தல் மான்ற மாலை மயிலியல் வருத்தல் தோன்றக் கூறித் துயரவற் குரைத்தன்று. (இ - ள்.) மயங்கிய மாலைக்காலம் மயில்போன்ற இயலினையுடைய தலைவியை வருத்தலை அறியச் சொல்லி அவள் துன்பத்தைத் தோழி தலைவற்குச் சொல்லியது எ-று. வ - று. உள்ளத் தவலம் பெருக வொளிவேலோய் எள்ளத் துணிந்த விருண்மாலை -வெள்ளத்துள் தண்டா ரகலந் தழூஉப்புணையா நீநல்கின் உண்டாமென் றோழிக் குயிர். (இ - ள்.) நெஞ்சில் துயரமிகச் சோதிவேலோய் இகழ்தற்கு நிச்சயித்த இருளினையுடைய மாலைவெள்ளத்திலே குளிர்ந்த மாலை மார்பத்தைத் தழுவுதற்குத் தெப்பமாக நீ அளிப்பாயாகில் எனதுதோழிக்கு உயிர் உண்டாம் எ-று. (4)
(பி-ம்.) 1. 'யாகின்று' |