பக்கம் எண் :

329. கண்டு கைசோர்தல்

போதார் கூந்தற் பொலந்தொடி யரிவை
காதல் கைம்மிகக் கண்டுகை சோர்ந்தன்று.

(இ - ள்.) மலர் நிறைந்த குழலினையும் பொற்றொடியினையும் உடைய தலைவிதன் அன்பு கைகடப்பத் தோழி கண்டு தன்னுடைய ஒழுக்கம் தளர்ந்தது எ-று.

வ - று.1ஆம்ப னுடங்கு மணிவளையு மேகின
கூம்பன் மறந்த கொழுங்கயற்கண் - காம்பின்
எழில்வாய்ந்த தோளி யெவனாங்கொல் கானற்
பொழிலெல்லா மீயும் புலம்பு.

(இ - ள்.) ஆம்பற்றண்டை வளைத்திட்ட அழகிய வளையும் வீழ்ந்தன; துயில் இழந்தன, வளவியகயல்போலும் விழிகள்; மூங்கிலினும் அழகு மருவின தோளினையுடையாள் என்னாங்கொல்லோ! கடற்கரைச்சோலை முழுதுந்தரும், தனிமையை எ-று.

ஆம்பற்றண்டுபோலும் திரண்டவளையென்பாரும், இதழ்போலும் வெள்வளையென்பாருமுளர்.

(5)

330. பருவமயங்கல்

உருவ வால்வளை யுயங்கத் தோழி
பருவ மயங்கிப் படருழந் தன்று.

இ - ள். அழகிய வெள்வளையினையுடையாள் வருந்தப் பாங்கி காலத்தை அன்றாமென மருண்டு வருத்தமுற்றது எ-று.

வ - று. பெரும்பணை மென்றோள்பிரிந்தாரெம் முள்ளி
வரும்பருவ மன்றுகொ லாங்கொல்-சுரும்பிமிரும்
பூமலி கொன்றை புறவெல்லாம் பொன்மலரும்
மாமயிலு மாலு மலை.

(இ - ள்.) பெரிய மூங்கில்போன்ற மெல்லிய தோளினை நீங்கிய தலைவர் எம்மை நினைந்து வருங்காலம் அல்லகொல்லோ? ஆங்கொல்லோ? வண்டொலிக்கும்பூ மிக்க கொன்றை குறுங்காடெல்லாம் பொன்னைப்பூக்கும்; அழகிய மஞ்ஞையும் மலையிடத்தே ஆலியாநிற்கும் எ-று.

இது தோழி ஆற்றுவிக்கும் வகை அன்றாதலிற்பெருந்திணை யாயிற்று.

(6)

331. இதுவுமது

ஆங்கவர் கூறிய பருவ மன்றெனத்
தேங்கமழ் கோதை தெளிதலு மதுவே.


1. ஆம்பல்வளை: புறநா. 63 : 12, பரி. 11 : 101-2.