(இ - ள்.) கரும்பினையும் காய்ந்த நெல்லினையும் முழங்கு நெருப்பினை உண்ணப்பண்ணுவித்துப் பெரிய நீர்நிலைகள் பலவும் உடைத்தபின்னும் வண்டின் கூட்டமிக்க குளிர்ந்த செங்கழுநீரின் தூய்தான பூவாற் செய்த மாலையினையுடையோன் சத்துருக்கள் பொலிவழிய விட்ட படை வீட்டிலே இருந்தான் எ - று. (21) 57. 1பெருவஞ்சி முன்னடையார் வளநாட்டைப் பின்னருடன் றெரிகொளீஇயன்று. (இ - ள்.) தன்னுடைய முன்னே வந்து செறியாதார் நல்ல தேசத்தைப் பின்பும் கோபித்து நெருப்பைக் கொளுத்தியது எ - று. வ - று. பீடுலா மன்னர் நடுங்கப் பெரும்புகை ஊடுலாய் வானத் தொளிமறைப்ப - நாடெலாம் பின்னும் பிறங்கழல் வேய்ந்தன பெய்கழற்கால் மன்னன் கனல மறம். (இ - ள்.) பெருமைபரந்த மன்னர் துளங்கப் பெரியதூமம் நடுவே உலாவி ஆகாயத்தின்கண் விளக்கத்தினை மறைப்பத் தேயமுழுதும் இரண்டாவதும் மிக்க நெருப்பு மூடப்பட்டன, காலிலேயிட்ட வீரக்கழலையுடைய அரசனுடைய சினம் மூள்கையாலே எ - று. (22) 58. 2பெருஞ்சோற்று நிலை திருந்தார் தெம்முனை தெறுகுவ ரிவரெனப் பெருஞ்சோ றாடவர் பெறுமுறை வகுத்தன்று. (இ - ள்.) பகைவர் வேற்றுப்புலத்தை நமக்கு அழித்துத்தருவரிவரென்று சொல்லி மிக்க சோற்றை வீரர் கொள்ளும் வகையிலே கொடுத்தது எ - று. வ - று. இயவர் புகழ வெறிமுர சார்ப்பக் குயவரி வேங்கை யனைய - வயவர் பெறுமுறையாற் பிண்டங்கோ ளேவினான் பேணார் இறுமுறையா லெண்ணி யிறை. (இ - ள்.) அரசன் வாச்சியக்காரர் துதிப்பக் கொட்டும் வீரமுரசு முழங்க அரிவாளேபோன்ற வரியினையுடைய புலியையொத்த வீரர் பெறும்படியே சோற்றுத்திரளையைக் கொள்கையை ஏவினான்; பகைவர் படும்வகையால் விசாரித்து அரசன் எ - று. (23) 59. நல்லிசை வஞ்சி ஒன்னாதார் முனைகெடவிறுத்த 3வென்வேலாடவன் விறன்மிகுத்தன்று. (இ - ள்.) சத்துருக்கள் வேற்றுப்புலம் அழியவிட்ட வென்றி வேலினை யுடையவன் வெற்றியை மிகுத்துச் சொல்லியது எ - று.
1. சிலப். 25 : 143 . 2. தொல். புறத். சூ. 8; அகநா. 233 : 9; புறநா. 2 : 16; சிலப். 23 : 55, 25 : 144, 26 : ஊசல்வரி. 3. பு - வெ. 62; மணி. 21 : 5. |