பக்கம் எண் :

76. 1பேய்நிலை

செருவேலோன் றிறநோக்கிப்
பிரிவின்றிப் பேயோம்பின்று.

(இ - ள்.) போரைச்செய்யும் வேலினையுடையாள் திறப்பாட்டை நோக்கி நீங்குதலொழிந்து பேய் பரிகரித்தது எ - று.

வ - று.2ஆயு மடுதிறலாற் கன்பிலா ரில்போலும்
தோயுங் 3கதழ்குருதி தோள்புடைப்பப் - பேயும்
களம்புகலச் சீறிக் கதிர்வேல்வாய் வீழ்ந்தான்
உளம்புகல வோம்ப லுறும்.

(இ - ள்.) பலருங்கொண்டாடும் கொல்லும் வலியினையுடையாற்கு அன்பிலாதார் இல்லைபோலும்; நிலமெல்லாம் நனையும் விரைந்த சோரி தோளிலே அலைப்பப் பேய்தானும் பூசற்களத்துள்ளார் விரும்ப வெகுண்டு ஒளியினையுடைய வேலின்வாயிலே விழுந்தவன்றன் மனமகிழப் பரிகரித்தலைச் செய்யாநின்றது எ - று .

(16)

77. பேய்க்காஞ்சி

பிணம்பிறங்கிய களத்துவீழ்ந்தாற்
கணங்காற்ற வச்சுறீஇயன்று.

(இ - ள்.) பிணமிக்க போர்க்களத்திலே பட்டாற்குப் பேய் மிகவும் அச்சமுறுத்தியது எ - று.

வ - று. கொட்கு நிமிருங் குறுகுங் குடர்சூடிப்
பெட்ப நகும்பெயரும் பேய்மகள் - உட்கப்
புனலங் குருதிப் புலால்வாய்க் கிடந்து
கனல விழிப்பவற் கண்டு.

(இ - ள்.) சுழலும், நீளும், குறுகும், குடர்மாலையைச் சூடித் தன் உள்ளம் விரும்பச் சிரிக்கும், போம், பேய்ப் பெண்; வெருவர அழகிய உதிரமாகிய நீரிற் புலாலிடத்துக் கிடந்து அழலநோக்கும் வீரனைப் பார்த்து எ - று.

(17)

78. தொட்ட காஞ்சி

வியன்மனைவிடலை புண்காப்பத்
துயன்முலைப்பேழ்வாய்ப் பேய்தொட்டன்று.

(இ - ள்.) அகன்ற இல்லிலே தலைமகனுடைய புண்ணைப் பரிகரிக்க நான்றமுலையினையும் பெரியவாயினையுமுடைய பேய்மகள் புண்ணைத் தீண்டியது எ - று.


1. தொல். புறத். சூ. 24; பேய்ப்பக்கம். 2. தொல். புறத். சூ. 19, இளம். மேற்; புறநா. 281. 3. கதழ் : மணி. 13 : 48.