யாவர்க்கும் தருமந்தோன்றின வாயிலை யடைத்தது; தலைவன் மருமத்தை வெளிசெய்த நீண்ட இலைத்தொழிலாற் சிறந்தவேல். எ - று. (20) 81. கட்காஞ்சி நறமலியு நறுந்தாரோன் மறமைந்தர்க்கு மட்டீந்தன்று. (இ - ள்.) மதுமிகும் கமழுமாலையோன் தறுகணாளர்க்கு மதுவைக் கொடுத்தது எ - று. வ - று. ஒன்னா முனையோர்க் கொழிக வினித்துயில் மன்னன் மறவர் மகிழ்தூங்கா - முன்னே படலைக் குரம்பைப் பழங்கண் முதியாள் விடலைக்கு வெங்கள் விடும். (இ - ள்.) பொறாத பகைவர்க்கு இனி ஒழிவதாக உறக்கம்; வேந்தன், கொடுவினையாளர் மதுவையுண்டு களித்தாடுவதற்கு முன்னே தழைக்கற்றையான் வேய்ந்த குடிலிடத்துப் புன்கட்கிழவி பெற்ற வீரனுக்கு வெவ்விதமான மதுவை விடாநின்றான் எ - று. (21) 82. ஆஞ்சிக் காஞ்சி காதற் கணவனொடு கனையெரி மூழ்கும் மாதர்மெல் லியலின் மலிபுரைத் தன்று. (இ - ள்.) அன்பினையுடைய தன்கொழுநனோடு செறிந்த நெருப்பிலே அழுந்தும் காதலையுடைய மெத்தென்ற தன்மையாற் சிறந்தவள் தன் மிகுதியைச் சொல்லியது எ - று. வ - று. தாங்கிய கேளொடு தானு 1மெரிபுகப் பூங்குழை யாயம் புலர்கென்னும் - நீங்கா விலாழிப் பரித்தானை வெந்திறலார் சீறூர்ப் புலாழித் தலைக்கொண்ட புண். (இ - ள்.) தரித்தகணவனோடு தானும் நெருப்பிலேபுகுவான் வேண்டிப் பொலிந்த மகரக்குழையையுடையவள் தோழிமாரை அகலப்போமினென்று சொல்லும்; ஒழியாத வாய்நுரையினையுடைய குதிரையாற் சிறந்த சேனைப் பகைவர் சீறூரிடத்துப் புலானாற்றத்தினையுடைய சக்கரத்தாலே எறியப்பட்டபுண்ணை எ - று. புண்ணைத்தாங்கிய கேளொடு எனக்கூட்டுக. புலவென்பதனுள் அகரம் தொக்கது; ஒற்று இரட்டாமையுமறிக. (22) 83. இதுவுமது மன்னுயிர் நீத்த வேலின் மனையோள் இன்னுயிர் நீப்பினு மத்துறை யாகும். (இ - ள்.) தலைவன் உயிரினை நீக்கின அயிலாலே மனைக்கிழத்தி இனிய ஆவியை ஒழிப்பினும் முன்சொன்ன துறையேயாம் எ - று.
(பி-ம்) 1. 'மெரிபுகீஇப்' |