வ - று.1வாணாட்கொளலும் வழிமொழிந்து வந்தடையாப் பேணார் பிறைதொடும் பேமதிற்-பூணார் அணிகொள் வனமுலையா ராடரங்க மேறிப் பிணிகொள்பே யாடும் பெயர்த்து. (இ - ள்.) வாளினைப் புறவீடுவிட்டானாக, தாழ்வு சொல்லிவந்து சேராத பகைவருடைய மதியைத் தீண்டும் அச்சமுறுத்தும் மதிலிடத்து ஆபரணம் நிறைந்த அலங்காரங்கொண்ட அழகிய கொங்கையினையுடையார் நிருத்த மண்டபத்தேயேறிக் கைகோத்த பேயாடும், பல கூத்தினையும் மாறி. எ - று. திணைதோறும் வாணாட்கோள் குடைநாட்கோள் வேறுபாடுடைய. (3) 98. முரச வுழிஞை பொன்புனை யுழிஞை சூடி மறியருந்தும் திண்பிணி முரச நிலையுரைத் தன்று. (இ - ள்.) பொன்னாலே செய்த உழிஞை மாலையை மலைந்து ஆடு வெட்டியிடும் பலியை நுகரும் திண்ணிதாக வாராற்கட்டின முரசின் நிலைமையைச் சொல்லியது. எ - று. வ - று. கதிரோடை வெல்களிறு பாயக் கலங்கி உதிரா மதிலு முளகொல் - அதிருமால் பூக்கண் மலிதார்ப் புகழ்வெய்யோன் கோயிலுள் மாக்கண் முரச மழை. (இ - ள்.) ஒளியாற் சிறந்த பட்டத்தினையுடைய வெல்லும்யானை குத்தக் குலைந்து வீழாத புரிசையும் சில உளபோலும்; முழங்குமால், மலர்கண்மிக்க மாலையினையுடைய இசையை விரும்பியோன் மாளிகையிடத்துப் பெரிய கண்ணினையுடைய வீரமுரசம் மழைபோல். எ - று. மழைபோல் அதிருமாலென்க. (4) 99. கொற்ற வுழிஞை அடையாதா ரரண் 3கொள்ளிய படையோடு பரந்தெழுந்தன்று. (இ - ள்.) பகைவர்தங் காவற்பதியைக் கைக்கொள்வான் வேண்டிச் சேனையோடுகைவளர்ந்து சென்றது வ - று. வெள்வாட் கருங்கழற்கால் வெஞ்சுடர்வேற் றண்ணளியான் 4கொள்வான் கொடித்தானை கொண்டெழுந்தான் - நள்ளாதார் அஞ்சுவரு வாயி லருமிளைக் குண்டகழி மஞ்சிவரு ஞாயின் மதில்.
1. தொல். புறத். சூ 11, இளம். மேற். 2. "கொள்ளார்தேங் குறித்த கொற்றம்" என்பர்; தொல் . புறத் . சூ . 12 . 3. நன் . சூ . 343, மயிலை. மேற். (பி-ம்) 4. ' கொளீஇய' |