பக்கம் எண் :

(இ - ள்.) ஒளிபரந்த வாளினையும் வலிய வீரக்கழலாற்சிறந்த காலினையும் வெய்ய சோதியாற்பொலிந்த வேலினையும் தண்ணளியையுமுடையவன் கைப்பற்றிக் கொள்வானாகப் பதாகையினையுடைய சேனையை ஒன்றுபடக் கொண்டெழுந்தான்; பொருந்தாதார் வெருவரு வாயிலினையும் புகுதற்கரிய குறுங்காட்டினையும் ஆழ்ந்த கிடங்கினையும் மேகம் பரக்கும் ஏவறையினையுமுடைய அரணத்தை. எ - று.

100. அரச வுழிஞை

தொழில்காவன் மலிந்தியலும்
பொழில்காவலன் புகழ்விளம்பின்று.

(இ - ள்.) காவற்செய்தி மிக்குநடக்கும் பூமிகாவலன்றன் கீர்த்தியைச் சொல்லியது. எ - று.

வ - று. ஊக்க முரண்மிகுதி யொன்றிய நற்சூழ்ச்சி
ஆக்க மவன்க ணகலாவால்-வீக்கம்
நகப்படா வென்றி நலமிகு தாராற்
ககப்படா வில்லை யரண்.

(இ - ள்.) மனவெழுச்சியும் மாறுபாட்டின் பெருமையும் பொருந்திய நல்ல விசாரமும் செல்வப் பெருக்கமும் அவனிடத்து நீங்காவால்; பெருமையினையும் பிறரால் இகழத்தகாத வெற்றியினையும், நன்மை மலியும் மாலையினையும் உடையவனுக்குக் கையகப்படாதன இல்லை, காவற்குறும்புகள் யாவையும். எ - று.

(6)

101. 1கந்தழி

மாவுடைத்தார் மணிவண்ணன்
சோவுடைத்த மறநுவலின்று

(இ - ள்.) வண்டினையுடைய மாலையாற் சிறந்த நீலமணிபோன்ற மேனியையுடையான் வீரசோவென்னும் அரணத்தை அழித்த வீரத்தைச் சொல்லியது. எ - று.

வ - று.2அன்றெறிந் தானு மிவனா லரண்வலித்
தின்றிவன் மாறா வெதிர்வார்யார்-என்றும்
மடையார் மணிப்பூ ணடையாதார் மார்பிற்
சுடராழி நின்றெரியச் சோ.

(இ - ள்.) அந்நாள் அழித்தவனும் இவன், அரண்வலிதென்றுதேறி; இந்நாள் இவன்பகையாக எதிர்ப்பார் யார் எக்காலத்தும்? மூட்டார்ந்த மணியணியையுடைய பொருந்தாதாருடைய அகலத்து ஒளிவிடுந் திகிரி நின்று அழலச் சோவென்னும் அரணத்தை. எ - று.

இஃது உவமையன்று; மிகுதி கூறியது.

(7)


1. கந்தழி : தொல். புறத். சூ 33. 2. தொல். புறத். சூ. 27. இளம். மேற்.