பக்கம் எண் :

102. முற்றுழிஞை

ஆடிய லவிர்சடையான்
சூடியபூச் சிறப்புடைத்தன்று.

(இ - ள்.) அசையுந் தன்மையினை உடைத்தாய் விளங்கும் வேணியையுடையான் மலைந்த பூவினது நன்மையைச் சொல்லியது. எ - று.

வ - று. மயங்காத தார்ப்பெருமை மற்றறிவார் யாரே
இயங்கரண மூன்று மெரித்தான் -தயங்கிணர்ப்
பூக்கொ ளிதழிப் புரிசெஞ் சடையானும்
மாக்கொ ளுழிஞை மலைந்து.

(இ - ள்.) மருளாத உழிஞையின் மிகுதியை வேறுணர்வார் யாவர் தாம். திரிபுரங்கள் மூன்றையும் சுட்டான்; விளங்கும் கொத்திற் பொலிவுகொண்ட கொன்றையையுடைய புரிந்த செஞ்சடையானும் பெருமைகொண்ட உழிஞையைச் சூடி. எ - று.

(8)

103. 1காந்தள்

கருங்கடலுண் மாத்தடிந்தான்
2செழுங்காந்தட் சிறப்புரைத்தன்று.

(இ - ள்.) கறுத்த கடலிடத்துச் சூரபன்மாவைக் கொன்றவனுடைய காந்தட்பூவின் மிகுதியைச் சொல்லியது.

வ - று.3குருகு பெயரிய குன்றெறிந் தானும்
உருகெழு காந்தண் மலைந்தான்-பொருகழற்
4கார்கருதி வார்முரச மார்க்குங் கடற்றானைப்
போர்கருதி யார்மலையார் பூ.

(இ - ள்.) குருகின் பெயர்பெற்ற மலையை எறிந்தவனும் அழகு மருவின கோடலைச் சூடினான்; வீரக்கழலினையுடைத்தாய் மேகத்தையொத்து வாராற் பிணித்த முரசுமுழங்குங் கடல்போன்ற சேனையிடத்துப் பூசலை நினைந்து யாவர் சூடார் பூவினை ?. எ - று.

குருகு பெயரிய குன்று - கிரவுஞ்சகிரி

(9)

104. புறத்திறை

மறத்துறை மலிந்து மண்டி மாற்றார்
விறற்கொடி மதிலின் புறத்திறுத் தன்று.

(இ - ள்.) சினத்தின் வழிமிக்கு மேற்கொண்டு பகைவருடைய வெற்றிக்கொடியணிந்த அரணின் சுற்றிலே விட்டது. எ - று.


1. தொல். புறத். சூ. 5. இத்துறையை அகப்புறமென்பார்; யா-வி. 2. காந்தட்பூ : முருகு. 43-4. 3. மணி. 5:13. 4. பு-வெ. 127.