பக்கம் எண் :

வ - று. புல்லார் புகலொடு போக்கொழியப் பொங்கினனாய்ப்
பல்லார் மருளப் படைபரப்பி-ஒல்லார்
நிறத்திறுத்த வாட்டானை நேரார் மதிலின்
புறத்திறுத்தான் பூங்கழலி னான்.

(இ - ள்.) பகைவர் புகுமிடமும் ஒடிப்போம் வழியும் இன்றியேயொழியப் பொங்கியெழுந்து பலமன்னரும் மயங்கத் தன் சேனையைக் கைவளரவிட்டுப் பகைவர் மருமத்திலே குளித்த வாட்சேனையினையுடைய பகைவர் அரணத்தின் பக்கத்திலே பாடிவீடு கொண்டான், பொலிந்த வீரக்கழலினையுடையவன். எ - று.

(10)

105. ஆரெயிலுழிஞை

வாஅண்மறவர் வணங்காதார்
நீ இண்மதிலி னிலையுரைத்தன்று.

(இ - ள்.) வாளினையுடைய வீரர் தம்மைப் பணியாதாருடைய உயர்ந்த புரிசையின் திண்மையைச் சொல்லியது. எ - று

வ - று. மயிற்கணத் தன்னார் மகிழ்தேற லூட்டக்
கயிற்கழலார் கண்கனல் பூப்ப - எயிற்கண்ணார்
வீயப்போர் செய்தாலும் வென்றி யரிதரோ
மாயப்போர் மன்னன் மதில்.

(இ - ள்.) மயிலின் திரளனையார் களிக்கும் மதுத்தெளிவை உண்ணப்பண்ண மூட்டுவாயாற் சிறந்த கழலினையுடைய உழிஞையார்விழி நெருப்பைக் கால அரணிடத்தார் பலரும்படப் பூசல் செய்தாலும் வெற்றியரிது; வஞ்சச்செருவினைச் செய்யவல்ல வேந்தன் புரிசையை. எ - று.

மதிலை வென்றியரிதென்க. அரோ : இசை.

(11)

106. தோலுழிஞை

வென்றி யோடு புகழ்விளைக் கும்மெனத்
தொன்று வந்த தோன்மிகுத் தன்று.

(இ - ள்.) வெற்றியுடன் இசையை உண்டாக்குமெனச் சொல்லிப் பழையதாகி வந்த கிடுகுபடையைச் சிறப்பித்தது. எ - று.

வ - று.1நின்ற புகழொழிய நில்லா வுயிரோம்பி
இன்றுநாம் வைக லிழிவாகும் - வென்றொளிரும்
பாண்டி னிரைதோல் பணியார் பகையரணம்
வேண்டி னெளிதென்றான் வேந்து.

(இ - ள்.) நிலைநின்ற கீர்த்திபோக நிலைநில்லாத உயிரைக்காத்து இற்றை நாளிலே நாம் இவ்வெயிற்புறத்துத் தங்குமது நமக்குத் தாழ்வு;


1. தொல். புறத். சூ. 10, இளம். மேற்; "நின்ற ...வேந்து" : தொல். புறத். சூ 12 ந. மேற்; நின்ற...உயிர்" : குறள். 235; சூளா. சீய. 204.