(இ - ள்.) கணையத்தையொத்த திண்ணியதோளினையுடைய மன்னனுடைய வெல்லுந்தேர்முன் நிறைந்தவலியாற்சிறந்த வீரர் ஆடியது. எ - று. வ - று. ஆனா வயவர்முன் னாட வமர்க்களத்து வானார்மின் னாகி வழிநுடங்கும்- நோனாக் கழுமணிப் பைம்பூட் 2கழல்வேந்த னூரும் குழுமணித் திண்டேர்க் கொடி. (இ - ள்.) அமையாதவீரர் முன்னேயாடப்போர்க்களத்து மேகத்து நிறைந்த மின்போன்று முறையேயாடும்; பகைபொறாத கழுவுமணியான் அமைந்த பசும்பூணினையுடையகழல்வேந்தன் நடத்தும் திரண்ட மணியினையுடையதிண்ணிய தேர்மேற் கொடி. (17) 144. பின்றேர்க் குரவை கருங்கழன் மறவரொடு வெள்வளை விறலியர் பெருந்தகை தேரின் பின்னா டின்று. (இ - ள்.) 3வலிய கழல்வீரரொடு விளர்த்த வளையினையுடைய பாணிச்சியர்,பெரிய மேம்பாட்டினையுடையான்றனது தேரின்பின் ஆடியது. எ - று. (வ - று.) கிளையாய்ந்து பண்ணியகேள்வியாழ்ப் பாணும் வளையா வயவரும் பின்னாக் - கொளையாய்ந் தசைவிளங்கும் பாடலொ டாட வருமே திசைவிளங்குந் தானையான் றேர். (இ - ள்.) கிளைநரம்பை ஆராய்ந்தமைத்தசுருதியான்மிக்க யாழைவல்ல பாண்கிளையும்தோலாவீரரும் பின்பாக இசையை ஆராய்ந்து தூக்குதல்விளங்கும் பாடுதலுடனே கூத்தாட வரும்; திக்கிலேவிளங்கும் சேனையையுடையான்றனது தேர். பாண் என்பது சாதிப் பெயர். (18) 145. பேய்க் குரவை மன்ன னூரு மறமிகு மணித்தேர்ப் பின்னு முன்னும் பேயா டின்று. (இ - ள்.) அரசன் செலுத்தும் கொடுமைமிக்க மணியையுடைய தேரின்பின்பும் முன்பும் பேய் ஆடியது. (வ - று.) முன்னரும் பின்னரும் மூரிக் கடற்றானை மன்ன னெடுந்தேர் மறனேத்தி- ஒன்னார் நிணங்கொள்பேழ் வாய 1நிழல்போ னுடங்கிக் கணங்கொள்பே யாடுங் களித்து.
1. சீவக. 309. (பி - ம்) 2. 'கழல்வெய்யோன்' 3. 'பெரிய' |