பக்கம் எண் :

(இ - ள்.) முன்னும் பின்னும், பெரிய கடல்போன்ற சேனையையுடைய அரசன் நெடியதேரின் மாறுபாட்டைவாழ்த்திப் பகைவரது நிணத்தைக் கொண்ட பெரியவாயினையுடைய திரண்ட பேய் சாயை போல அசைந்து மகிழ்ந்துநடமாடும்.

(19)

146. களிற்றுடனிலை

ஒளிற்றெஃகம் படவீழ்ந்த
களிற்றின்கீழ்க் கண்படுத்தன்று.

(இ - ள்.) ஒளியையுடைய வேல்படுதலான் வீழ்ந்த யானையின்கீழ்ப்பட்டது எ - று.

ஒளிற்றெஃகம்: விகாரம்.

(வ - று.)1இறுவரை வீழ வியக்கற்றவிந்த
தறுகட் டகையரிமாப் போன்றான்-சிறுகட்
பெருங்கைக் களிறெறிந்து பின்னதன் கீழ்ப்பட்ட
கருங்கழற் செவ்வே லவன்.

(இ - ள்.) பெரியமலை முறிந்து வீழப் போக்கற்றுப்பட்ட கொடுமைத்தொழின்.மேம்பாட்டினையுடைய சிங்கத்தை ஒத்தான்; சிறிய கண்ணினையும் பெரிய கையினையுமுடைய ஆனையையெறிந்து பின்னர் அதன் கீழ்ப்பட்ட வலிய வீரக் கழலினையும் சிவந்த வேலினையும் உடையவன் எ - று.

(20)

147. ஒள்2வாளமலை

வலிகெழுதோள் வாள்வயவர்
ஒலிகழலானுடனாடின்று

(இ - ள்.) உரம்பொருந்திய தோளினையுடையவாள்வீரர் ஆர்க்கும் வீரக் கழலினையுடையானுடன் ஆடியது. எ - று.

(வ - று.) வாளை பிறழுங் கயங்கடுப்ப வந்தடையார்
ஆளமர் வென்றி யடுகளத்துத் - தோள்பெயராக்
காய்ந்தடு துப்பிற் கழன்மறவ ராடினார்
வேந்தொடு வெள்வாள் விதிர்த்து.

(இ - ள்.) வாளைமீன் மிளிரும் மடுவினையொப்ப,வந்து பொருந்தாதார் வீரர் மேவும்வெற்றியினையுடையகொலைக்களத்துத் தோளைப்பெயர்த்து வெகுண்டு கொல்லும் வலியினையுடைய கழல்வீரர் ஆடினார், அரசனுடனே விளர்த்த வாளினை அசைத்து எ - று.

(21)

148. தானைநிலை

இருபடையு மறம்பழிச்சப்
பொருகளத்துப் பொலிவெய்தின்று.


1. கம்ப. கடறாவு. 5; 'இறுவரை'; சீவக. 1833. 2. சீவக.783.