(வ - று.) நாட்டிய வாய்மொழி நாப்புலவர் நல்லிசை ஈட்டிய சொல்லா னிவனென்று - காட்டிய காயலோங் கெஃகிமைக்குங் கண்ணார் கொடிமதில் வாயிலோய் வாயி லிசை. (இ - ள்.) பூமியின்கண் நிறுத்திய மெய்ம்மொழியினையுடையநாவாற் சீர்சிறந்த அறிவினையுடையோர் புகழ்ந்த நல்ல புகழைப்பாடிய சொல்லினையுடைய வனி வனென்று சொல்லி என்னைக் காட்டுவான் வேண்டிச்சத்துருக்களைச் செறுதற்றொழிலுயர்ந்த வேலிலங்கும்கண்ணுக்கு நிறைந்த பதாகையாற் பொலிந்த புரிசையின்வாயிலிடத்துக் காவலாளனே, நான் வந்த வரலாற்றைச்சொல்லுவாயாக எ - று. (2) 191. கடவுள் வாழ்த்து காவல் கண்ணிய கழலோன் கைதொழும் மூவரி லொருவனை யெடுத்துரைத் தன்று. (இ - ள்.) பூமியைக்காத்தல்கருதிய வீரக்கழல்வேந்தன்கைகூப்பும் அரி அயன் அரனென்னும் மூவருள் ஒருவனை உயர்த்துச்சொல்லியது எ - று. (வ - று.)1வைய மகளை யடிப்படுத்தாய்வையகத்தார் உய்ய உருவம் வெளிப்படுத்தாய் - வெய்ய அடுந்திற லாழி யரவணையா யென்றும் நெடுந்தகை நின்னையே யாம். (இ - ள்.) நிலமகளைச் சீபாதத்திலே அடக்கியருளினை, ஞாலத்துள்ளார் பலரும் பிழைப்பத் திருமேனியைத்தோற்றுவித்தருளினை, வெவ்விதான கொல்லும்வலியாற்சிறந்த சக்கரத்தினையும் பாம்பணை யினையுமுடையாயென்றும் சொல்லுவம்; ஒருவராலும் அளத்தற்கரிய தன்மையினையுடையாய், நின்னை யாங்கள் எ - று. (4) 192. பூவை நிலை கறவை காவல னிறனொடு பொரீஇப் புறவலர் பூவைப் பூப்புகழ்ந் தன்று. (இ - ள்.) ஆனிரையைக் காத்த மாயவன் திருவுருவோடு உவமித்துக் காட்டிடத்தலரும் காயாம்பூவைப் புகழ்ந்தது எ - று. (வ - று.)2பூவை விரியும் புதுமலரிற் பூங்கழலோய் யாவை விழுமிய யாமுணரேம் - மேவார் மறத்தொடு மல்லர் மறங்கடந்த காளை நிறத்தொடு நேர்தருத லான். இ - ள். காயா மலரும் செவ்விப்பூப்போல , பொலிந்த வீரக்கழலினையுடையோய் , எப்பொருள் சீரியவை? யாங்கள் அறியேம்; பகைவர் சினத்துடனே வஞ்ச மல்லரது மாறுபாட்டை வென்ற இளமைப் பருவத்து மாயவனது திருமேனியோடு உவமைகொள்கையால் எ-று.
1. தொல். புறத். சூ .22, இளம். மேற். 2. தொல். புறத். சூ .5, இளம். மேற்; இ.வி. புறத். சூ. 19, மேற் |