பக்கம் எண் :

பூமலர்மேற் புள்ளொலிக்கும் பொய்கைசூழ் தாமரைத்
தூமலர்க்க1 3ணேற்க துயில்.

(இ - ள்.) இட்ட திறையினையுடையார்அகன்ற பூமியிடத்து வேந்த, வென்றிதரும் வேலினையுடையாய், நின்னைப் பணிய, இடம் விளங்கப் பொலிந்த மலர்மீதேபறவைகள் ஆரவாரிக்கும் பொய்கையிற் சூழ்ந்த தாமரையில் தூயமலரையொத்த கண்கள் துயிலாவாக எ - று.

(9)

எழுக துயிலென்றுமாம்.

198. மங்கலநிலை

கங்குற் கனைதுயி லெழுந்தோன் முன்னர்
மங்கலங் கூறிய மலிவுரைத் தன்று.

(இ - ள்.) கங்குலிடத்து மிக்க உறக்கத்தைநீங்கினோன் முன்னே மங்கலத்தைச் சொன்ன மிகுதியைச்சொல்லியது எ - று.

(வ - று.) விண்வேண்டின் வேறாதன் மங்கலம்வேந்தர்க்கு
மண்வேண்டின் கைகூப்பன் மங்கலம் - பெண்வேண்டின்
துன்னன் மடவார்க்கு மங்கலம் தோலாப்போர்
மன்னன்வரைபுரையு மார்பு.

(இ - ள்.) சுவர்க்கத்தை விரும்பின் வேறுபடுதல் ஆக்கம்; மண்ணாள வேண்டின் கைகுவித்தல் ஆக்கம் அரசர்க்கு; பெண்மைத் தன்மையை விரும்பின் அணையுமது பேதையர்க்கு ஆக்கம், தோல்வியறியாத பூசலையுடைய வேந்தன்றன் வரைபோன்ற அகலத்தை எ - று.

(10)

199. இதுவுமது

மன்னிய சிறப்பின் மங்கல மரபிற்
றுன்னின னென்றலு மத்துறை யாகும்.

(இ - ள்.) நின்று நிலைத்த முறைமையினையுடையமங்கலத்தை முறைமையாலே மேவினனென்னறு சொல்லுதலும்முன்புசொன்ன துறையேயாம் எ - று.

(வ - று.) தீண்டியுங் கண்டும் பயிற்றியுந்தன்செவியால்
வேண்டியுங் கங்குல் விடியலும் - ஈண்டிய
மங்கல மாய நுகர்ந்தான் மறமன்னர்
வெங்களத்து 2வேலுயர்த்த வேந்து.

(இ - ள்.) தீண்டக்கடவன தீண்டியும் காணக்கடவனகண்டும் சொல்லக்கடவன சொல்லியும் தன்னுடைய செவியாற்கேட்கக்கடவன கேட்டும் இரவுப்பொழுது புலர்ந்ததாகத்திரண்ட மங்கலமானவற்றை அனுபவித்தான், மாற்சரியத்தையுடையவேந்தர்தம் வெவ்விய போர்க்களத்து வென்று வேலேந்தினஅரசன். எ - று.

(11)


1. புறநா. 383; 1; பெருங். 4; 7: 91-2. 2. புறநா. 58; 29; 309: 7. (பி-ம்.) 3. 'ணேர்க'