200. விளக்கு நிலை அளப்பருங் கடற்றானையான் விளக்குநிலை விரித்துரைத்தன்று. (இ - ள்.) அளத்தற்கரிய கடல்போன்ற சேனையினையுடையான்றனது விளக்கினது நிலையைப் பரப்பிச் சொல்லியது எ-று. (வ - று.)1வளிதுரந்த கண்ணும் வலந்திரியாப் பொங்கி ஒளிசிறந் தோங்கி வரலால் - அளிசிறந்து நன்னெறியே காட்டு நலந்தெரி கோலாற்கு வென்னெறியே காட்டும் விளக்கு. (இ - ள்.) காற்றெறிந்தவிடத்தும் வலமாகச் சுழன்றெழுந்து சோதிவிட்டு உயர்ந்துவருவதால், தண்ணளியைமிகுத்து அழகிய வழியைக் காட்டவல்ல நன்றியை ஆராயும் செங்கோலினையுடைய வேந்தற்கு வெல்லு முறைமையே காட்டாநிற்கும் விளக்கு எ-று. (12) 201. இதுவுமது அடரவிர் பைம்பூண் வேந்தன் றன்னைச் சுடரொடு பொருவினு மத்துறை யாகும். (இ - ள்.) பொற்றகட்டாற் சிறந்துவிளங்கும் பூணினையுடைய மன்னன்றன்னை ஆதித்தனோடு உவமிப்பினும் முன்புசொன்ன துறையேயாம் எ-று. (வ - று.) வெய்யோன் கதிர்விரியவிண்மே லொளியெல்லாம் மையாந் தொடுங்கி மறைந்தாங்கு - வையகத்துக் கூத்தவை யேத்துங் கொடித்தேரான் கூடியபின் வேத்தவையுண் மையாக்கும் வேந்து. (இ - ள்.) ஆதித்தனுடைய சோதிபரக்க ஆகாயத்திடத்து ஒளியை யுடையன வெல்லாம் புற்கென்றுஅடங்கி ஒளித்தாற்போல , ஞாலத்துக் கூத்தர் திரளெல்லாம்புகழும் கொடித்தேரினை யுடையான் வந்தணைந்த பின்பு அரசவையிடத்துப் புற்கென்னும் , வேந்தர்திரள் எ-று. (13) 202. கபிலைகண்ணிய புண்ணியநிலை அண்ண னான்மறை யந்தணா ளர்க்குக் கண்ணிய கபிலை நிலையுரைத் தன்று. (இ - ள்.) தலைமையாற்சிறந்த நான்கு வேதத்தினையுமுடைய அந்தணர்க்குக் கொடுக்கக் கருதிய பசுவினது முறைமையைச் சொல்லியது எ-று. (வ - று.)1பருக்காழுஞ்செம்பொன்னும்பார்ப்பார் முகப்பக் குருக்கட் 2கபிலை கொடுத்தான் - செருக்கோ
1. தொல். புறத். சூ. 29 இளம். மேற். 2. பெருங். 1.39 : 64-9. |