பக்கம் எண் :

205. நாடு வாழ்த்து

தாட்டாழ் தடக்கையான்
நாட்டது வளமுரைத்தன்று.

(இ - ள்.) காலிலே உறத் தாழ்ந்த பெரியகரத்தினையுடையான் தேசத்தினது நன்மையைச் சொல்லியது எ-று.

(வ - று.) எண்ணி னிடரெரட்டு மின்றி வயற்செந்நெற்
கண்ணின் மலரக் கருநீலம் - விண்ணின்
வகைத்தாய் வளனொடு வைகின்று வென்வேல்
நகைத்தாரான் றான்விரும்பு நாடு.

(இ - ள்.) எண்ணுமிடத்து, எட்டிடரும் ஒழிந்து பழனத்திற் செந்நெலிற் கண்போலப் பூப்பநீலோற்பலம், தெய்வலோகத்தின் படித்தாய்ச் செல்வத்துடனே அவதரித்தது; வென்றிவேலினையும் மலர்ந்த மாலையினையு முடையான் பிரியப்படும் தேசம் எ-று.

இடரெட்டாவன: 1 ''விட்டில் கிளிநால்வாய் வேற்றரசு தன்னரசு நட்டம் பெரும்பெயல்காற்றெட்டு.''

(17)

206. கிணை நிலை

திருக்கிளரு மகன்கோயில்
அரக்கிணைவன் வளமுரைத்தன்று.

(இ - ள்.) செல்வம்பெருகும் பரந்தமாளிகையிடத்து அழகிய கிணை கொட்டுமவனது நன்மையைச் சொல்லியது. எ-று.

(வ - று.)2வெள்ளி முளைத்த விடியல் வயல்3யாமை
அள்ளகட்ட டன்ன வரிக்கிணை - வள்ளியோன்
முன்கடை தட்டிப் பகடுவாழ் கென்னாமுன்
என்கடை நீங்கிற் றிடர்.

(இ - ள்.) வெள்ளியெழுந்த வைகறையாமத்துச் செறுவின் யாமையினது செறிந்த வயிற்றினையொத்த அழகியகிணையை உபகாரியுடைய வாசற் கடைமுன்னே கொட்டியானைவாழ் வதாகவென்று சொல்லுவதன் முன்னே என்னிடத்து நின்றும் ஒழிந்தது, துயர் எ-று.

(18)

இஃது அரசர் மேற்று:

207. களவழி வாழ்த்து

செங்களத்துச் செழுஞ்செல்வம்
வெண்டுறையாழ்ப் பாணர்விளம்பின்று.

(இ - ள்.) சிவந்த போர்க்களரியிடத்து வளவியசெல்வத்தை 4ஆடற் பாட்டினை வல்லயாழ்ப்பாணர் சொல்லியது எ-று.


1. சீவக. 64, ந. மேற்.
2. பொருந.72.
3. பு-வெ.186. அடிக்.(பி-ம்)
4. ' யாழ்ப்பாட்டு'