பக்கம் எண் :

(வ - று.) ஈண்டி யெருவை யிறகுளரும் வெங்களத்து
வேண்டியாங் கொண்ட விறல்வேழம் - வேண்டாள்
வளைகள் வயிரியம்பும் வாட்டானை வேந்தே
விளைகட் பகர்வாள் விலை.

(இ - ள்.) திரண்டு பருந்து சிறகடிக்கொள்ளும் வெவ்விய பூசற்களரியிலே விரும்பி யாங்கள் கைக்கொண்ட வெற்றிவாரணத்தை விரும்பாள், 1சங்குகளும் கொம்பும்முழங்கும் வாளையுடைய சேனையினையுடைய மன்னனே, முதிர்ந்த நறவை விற்பாள் அதன்விலைக்கு எ-று.

(19)

208. வீற்றினிதிருந்த பெருமங்கலம்

கூற்றிருந்த கொலைவேலான்
வீற்றிருந்த விறன்மிகுத்தன்று.

(இ - ள்.) காலன் குடியிருந்த கொலைத்தொழிலையுடைய வேலோன் செம்மாந்திருந்த வெற்றியைச் சிறப்பித்தது எ-று.

(வ - று.) அழலவிர் பைங்க ணரிமா னமளி
நிழலவிர்பூண் மன்னர்நின் றேத்தக் - கழல்புனைந்து
வீமலிதார் மன்னவனாய் வீற்றிருந்தான் வீங்கொலிநீர்ப்
பூமலி நாவற் பொழிற்கு.

(இ - ள்.) தழலொளிரும் பசுங்கண்ணினாற் சிறந்தசிங்கம் சுமந்த அணைமேலே நிழலிலங்கும் ஆபரணத்தினையுடையமன்னர் நின்று வாழ்த்த வீரக்கழலினைக் கட்டிமலர்மிக்க மாலைவேந்தனாகிச் செம்மாந்திருந்தான், மிகும் ஒலிக்கடலையுடைத்தாய்ப் பொலிவு நிறைந்த நாவலத்தீவிற்கு எ-று.

(20)

209. குடுமி களைந்த புகழ்சாற்றுநிலை

நெடுமதி லெறிந்து நிரைதார் மன்னன்
கடுமி களைந்த மலிவுரைத் தன்று.

(இ - ள்.) நீண்ட அரணினையழித்து நிரைத்த மாலை யினையுடைய வேந்தன் குடுமி களைந்த மிகுதியைச்சொல்லியது எ-று.

(வ - று.)2பூந்தா மரையிற் பொடித்துப்புகல்விசும்பின்
வேந்தனை வென்றான் விறன்முருகன் - ஏந்தும்
நெடுமதில் கொண்டு நிலமிசையோ ரேத்தக்
3குடுமி களைந்தானெங் கோ.

(இ - ள்.) பொலிவினையுடைய சரவணப்பொய்கையில் தாமரைப் பூவிலே தோன்றி வெற்றியாலுயர்ந்த விண்ணுலகத்தில் இந்திரனைவென்றான், வெற்றியினையுடைய குமரவேள்; அழகேந்தும் உயரிய அரணைக் கைக்கொண்டு பூமியிலுள்ளோர் வாழ்த்தத்தன்மயிர்ச்சிகையைக் கூட்டி முடித்தான், எம்மன்னன் எ-று.

மதிலரசர் மணிமுடி கடந்தானென்றுமாம்.

(21)


1. பு - வெ. 24. 2. பரி. 5 : 49 - 56. 3. புறநா. 77: 2:கூர்ம. சுவேதவராக. 5.