108தண்டியலங்காரம்

இப்பாடற்கண் கூறப்படும் பொருள்கள் பெண்களின் நோக்கும் , ஒட்டக் கூத்தரின் வாக்கும் ஆகும் . முன்னிரண்டடிகளில் இவ்விரண்டற்கும் உள்ள ஒப்புமையைக் கூறிப் பின்பு , பின்னிரண்டடிகளில் ஒன்று மாதரிடத்திருக்கும் நோக்கு என்றும் , இன்னொன்று ஒட்டக்கூத்தரின் வாயிடத்துள்ள வாக்கு என்றும் அவ்வப்பொருள்களுக்கும் இருக்கும் இடத்தால் வேற்றுமை கூறி , அவ்வேற்றுமை யிருப்பினும் அவ்விரு பொருள்களும் சமமே எனத் தோன்றுமாறு கூறியிருத்தலின் , இது இருபொருள் வேற்றுமைச் சமமாயிற்று .

ஒட்டக்கூத்தரின் வாக்குச் செம்மையாகப் பொருள் தருதலோடு . அவரவரின் நுண்மாண் நுழைபுலத்திற்கேற்ப அவரவர் கருதும் நயப்பொருளையும் தருவதாகும் . இவ்வாற்றான் அவர்தம் வாக்கிற்குப் பொருள் கூறுமாற்றான் அவரவர் தம் அறிவு நுட்பம் அறியப்படுதலின் , 'சென்று செவியளக்கும் ' தன்மை அக்கவிக்கு உளதாயிற்று .

ஒட்டக்கூத்தர் : - இவரைப்பற்றிய குறிப்பினை ஆராய்ச்சி முன்னுரையில் காண்க . மலரி - இவ்வூர் திருச்சிராப்பள்ளிக்கு அண்மையிலுள்ள திருவெறும்பூர் ஆகும் . இவ்வுண்மை அவ்வூர்த் திருக்கோவிலிலுள்ள கல்வெட்டால் விளங்குகின்றது .

3. உயர்ச்சி வேற்றுமை

எ-டு : ' மலிதேரான் கச்சியும் மாகடலுந் தம்முள்
ஒலியும் பெருமையும் ஒக்கும் - மலிதேரான்
கச்சி படுவ கடல்படா கச்சி
கடல்படுவ வெல்லாம் படும் '

மாகடல் - பெரிய கடல் . மலிதேர் - மிக்கதேர் . கடலில் உள்ளது கச்சியில் உண்டாகும் ; கச்சியில் உள்ளன கடலில் இல்லை என்க .

இவை கூற்று வேற்றுமை .

வி-ரை,இ-ள்: தேர்கள் நிறைந்து விளங்கும் காஞ்சீபுரமும் , பெருமை பொருந்திய கடலும் தம்முள் ஒலியாலும் , பெருமையாலும் ஒத்து விளங்கும் . ஆயினும் தேர்கள் நிறைந்த காஞ்சீபுரத்தில் உள்ள பொருள்கள் கடலின்கண் இரா ; ஆனால் கடலில் உள்ள பொருள்கள் எல்லாம் காஞ்சீபுரத்தில் இருப்பனவாம் என்பதாம் .

இப்பாடற்கண் கூறப்பட்ட பொருள்கள் கச்சியும் , கடலும் ஆகிய இரண்டாம் . முன்னிரண்டடிகளில் இவ்விரண்டற்கும் உள்ள ஒப்புமையைக் கூறிப் , பின்னிரண்டடிகளில் கடலினும் கச்சியே உயர்ந்தது என அவ்வுயர்ச்சிக்கான காரணத்துடன் வேற்றுமையையும் கூறியிருத்தலின் , இது உயர்ச்சி வேற்றுமை ஆயிற்று .

கூற்று வேற்றுமை - வெளிப்படையாக வேற்றுமை கூறுவது .

4. இருபொருள் வேற்றுமைச் சமம்

எ-டு : ' கார்க்குலமும் பாய்திரையுங் காட்டும் கடல்படையும்
போர்க்களிறும் பாய்மாவும் பொங்குமால் - 1ஏற்றும்
கலமுடைத்து முந்நீர் கதிராழித் திண்டேர்
பலவுடைத்து வேந்தன் படை '


1. 'ஏற்றகலம்' என்பதும் பாடம் .