இ-ள்: கரிய முகிலையும் பரந்த திரைகளையும் உடைத்து , கடலானது ; சோழனது சேனையும் , போர்த்தொழில் மிக்க களிறும் , பாயுங் குதிரையும் மிக்குத் தோன்றும் ; அந்தக் கடலானது , பலபொருளும் ஏற்றும் மரக்கலம் உடைத்து ; சோழனது சேனையும் , பலகதிராழித் திண்டேரினை உடைத்து எ-று .
வி-ரை: இப்பாடற்கண் கூறப்பட்ட பொருள்கள் கடலும் , படையும் ஆகிய இரண்டுமாம் . முன்னிரண்டடிகளில் இவ்விரண்டற்கும் உரிய ஒப்புமையைக் கூறிப் பின்னிரண்டடிகளில் கடல் கலம் உடைத்து ; படைதேர் உடைத்து என வேற்றுமை கூறி , அவ்வேற்றுமை யிருப்பினும் அவ்விரண்டும் சமமே எனக் கருதுமாறு கூறியிருத்தலின் , இது இருபொருள் வேற்றுமைச் சமமாயிற்று .
கடலிடத்துள்ள மேகம் , அலை ஆகிய இரண்டற்கும் , படையிடத்துள்ள களிறு , குதிரை ஆகிய இரண்டும் ஒப்புமை யுடையன என்பதைக் குறிப்பால் புலப்படுத்தி யிருத்தலின் , இது குறிப்பான் வந்த வேற்றுமை யாயிற்று .
5. உயர்ச்சி வேற்றுமை
எ-டு : ' பதுமங் களிக்கும் அளியுடைத்துப் பாவை
வதனம் மதர்நோக் குடைத்துப் - புதையிருள்சூழ்
அப்போ(து) இயல்பழியும் அம்போ ருகவதனம்
எப்போது நீங்கா தியல்பு '
பதுமம் - தாமரை . வதனம் - முகம். களித்தல் - மயங்குதல் . புதையிருள்சூழ் அப்போது - மாலை .
இவை குறிப்பு வேற்றுமை . பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க .
வி-ரை,இ-ள்: தாமரை தன்னிடத்து வண்டுகளை உடையது , இப்பெண்ணின் முகமும் தன்னிடத்து மதர்த்த கண்களை உடையது ; எனினும் உலகை இருளில் மறைக்கும் இரவு நேரத்தில் தாமரை தன் இயல்பு கெடும் , ஆனால் இப்பெண்ணின் முகமோ எப்போதும் தன் இயல்பு கெடாது என்பதாம் .
இப்பாடற்கண் கூறப்பட்ட பொருள்கள் தாமரை , பெண்ணின் முகம் ஆகிய இரண்டுமாம் . முன்னிரண்டடிகளில் இவ்விரண்டற்கும் உள்ள ஒப்புமையைக் குறிப்பால் கூறிப் , பின்னிரண்டடிகளில் தாமரையிலும் முகம் உயர்ந்ததற்கான வேற்றுமையைக் கூறியிருத்தலின் , இது குறிப்பான் வந்த உயர்ச்சி வேற்றுமை ஆயிற்று .
'பிறவும்' என்பது குறிப்பான் வந்த ஒருபொருள் வேற்றுமைச்சமமாம் . இதற்கு எடுத்துக்காட்டுக் காட்டாமையின் அதனை வந்தவழிக் கண்டு கொள்க என்றார் .
அதன் வகை
49 . அதுவே
குணம்பொருள் சாதி தொழிலொடும் புணரும் .