கொண்டியங்க வேண்டுமெனில் , அது இறைவனைக் கொண்டியங்கினன்றி இயலாதாம் . இதுபற்றியே திருவிளையாடல் புராண ஆசிரியரான பரஞ்சோதியார் , தன்னிகரில்லாத் தலைமையோனைப் பெற்றியங்க வேண்டும் என்னும் இலக்கணத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்குவது தமது இலக்கியமே என்றும் , ஏனோர்தம் இலக்கியமெல்லாம் அவ்விலக்கணத்திற்கு உபசார வழக்காகுமே யன்றி உண்மை வழக்காகாது என்றும் வீறு தோன்றக் கூறுவர்.
'தன்னிக ருயர்ச்சி யில்லான் காப்பியத் தலைவ னாக
முன்னவர் மொழிந்த தேனோர் தமக்கெலா முகம னன்றோ
அன்னது தனதே யாகும் அண்ணலே பாண்டி வேந்தாய்
இந்நகர்க் கரச னாவான் இக்கவிக் கிறைவ னாவான்'
மந்திரம் : அமைச்சர்களுடன் ஆய்வு நிகழ்த்துவது
சந்தி: சந்தி ஐந்து வகைப்படும் ; அவை முகம் , பிரதிமுகம் , கருப்பம், விளைவு ,துய்த்தல் என இவை , இவற்றுள் முகமாவது , எழுவகைப்பட்ட உழவினாற் சமைக்கப்பட்ட பூழியுள் இட்ட வித்துப் பருவஞ் செய்து முளைத்து முடிவது போல்வது . பிரதிமுகாவது , அங்ஙனம் முளைத்தல் முதலாய் இலை தோன்றி நாற்றாய் முடிவது போல்வது. கருப்பமாவது , அந்நாற்று முதலாய்க் கருவிருந்து பெருகித் தன்னுட் பொருள் பொதிந்து கருப்பம் முற்றி நிற்பது போல்வது .விளைவாவது , கருப்பம் முதலாய் விரிந்து கதிர் திரண்டிட்டுக் காய் தாழ்ந்து முற்றி விளைந்து முடிவது போல்வது . துய்த்தலாவது விளையப்பட்ட பொருளை அறுத்துப் போரிட்டுக் கடாவிட்டுத் தூற்றிப் பொலி செய்துகொண்டு போய் உண்டு மகிழ்வது போல்வது. இவை ஐந்து சந்தியும் நாட்டியக் கட்டுரை .' (சிலம்பு- 3 ; 13 - அடியார்க்கு நல்லார் )
சருக்கம் என்ற பாகுபாட்டில் அமைக்கபட்டது பாரதம் முதலியன. இலம்பகம் என்ற பாகுபாட்டில் அமைக்கப்பட்டது சிந்தாமணி முதலியன. பரிச்சேதம் என்ற பாகுபாட்டில் அமைந்த இலக்கியம் இது பொழுது காணக் கிடைத்திலது.
சுவை எட்டு : நகை , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் , பெருமிதம் , வெகுளி , உவகை என்பன . இவ்வெட்டும் சுவையணியில் பின்னர் விளக்கப்படும்.
அகம்-ஐந்திணை . அகப்புறம் - கைக்கிளை, பெருந்திணை . புறம்-வெட்சி முதல் வாகையீறாக உள்ளன . புறப்புறம் - பாடாண் , பொதுவியல் என்பன.
அதற்குப் புறனடை
9. கூறிய வுறுப்பிற் சிலகுறைந் தியலினும்
வேறுபா டின்றென விளம்பினர் புலவர்.
எ-ன் மேலதற்கு ஒரு புறனடை உர்ணத்துதல் நுதலிற்று.
இ-ள்: மேற்சொல்லப்பட்ட உறுப்பிற் சில குறைந்துவரினும் , பெருங்காப்பியத்திற் பிறிதன்றென விளம்பினர் அறிவுடையோர் என்றவாறு.
சிறு காப்பியம்
10. அறமுதல் நான்கினுங் குறைபா டுடையது
காப்பிய மென்று கருதப் படுமே.