பொதுவணியியல்13

எ-ன்; காப்பியம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நான்கினுள் ஒன்றேனும் பலவேனும் குறைந்து வருவது காப்பியமென்று கருதப்படுவது எ-று.

இதனால் 'கூறிய வுறுப்பிற் சில குறைந்தியலும்' என்பதற்கு அறமுதல் நான்கு மொழித்து அல்லாத வுறுப்பிற் சில குறைவதே பெருங்காப்பிய மென்று கொள்ளப்படும். இது 'வந்தது கொண்டு வராதது முடித்தல்' என்பது.

வி-ரை:வந்தது கொண்டு வாராதது முடித்தல் -பின்பு ஓரிடத்து வந்தது கொண்டு, முன்பு வாராததோர் பொருளை அறிய வைப்பது.

அ-ஆம் நூற்பாவில் பெருங்காப்பியத்தின் இலக்கணத்தைக் கூறிய ஆசிரியர், 9-ஆம் நூற்பாவில் அவ்விலக்கணங்களுள் சில குறைந்து வரினும் பெருங்காப்பியமென்றெ கருத வேண்டும் என்றார் . ஆனால் எவ்விலக்கணங்கள் குறையலாம் என்றாரில்லை . இந்நூற்பாவில் சிலகாப்பியமென்பது அறம் , பொருள் , இன்பம் , வீடு ஆகிய பொருள்களில் குறைபாடுடையதாம் என்றனர். சிறு காப்பியத்தின் இலக்கணமாய இவ்விலக்கணத்தைக் கொண்டு , முன்னர்ப் பெருங்காப்பியத்தில் எவை குறைந்து வரினும் இழுக்கில்லை என்பது விளக்கமாகின்றது. அறமுதல் நான்கும் அல்லாத ஏனையிலக்கணங்களில் குறைந்து வரினும் பெருங்காப்பியம் என்று கருதப்படும் என்பதும் , ஏனைய இலக்கணங்கள் எல்லாம் நிரம்பி , ஆனால் அறமுதல் நான்கனுள் ஏதேனும் ஒன்று குறையினும் அது சிறுகாப்பியம் என்று கருதப்படும் என்பதும் விளங்குதலின் இது அவ்வுத்தி யாயிற்று.

இவ்வகையால் பிள்ளைத்தமிழ் , உலா , பரணி முதலியன சிறுகாப்பிய மாதல் நன்கு தெளியலாம்.

அதன் இலக்கணம்

11. அவைதாம்
ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
உரையும் பாடையும் விரவியும் வருமே.

எ-ன்: அக்காப்பியங்கட்கு எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: மேற்கூறிய பெருங்காப்பியமும் , காப்பியமும் , ஒருவகைச் செய்யுளாயினும் பலவகைச் செய்யுளாயினும் , உரை விரவியும் வருதலுடைய எ-று.

ஈண்டுச்செய்யுள் என்பது பாவும் இனமும் நோக்கியது. 'விரவியும் வரும்' என்ற உம்மையான் , விரவாது செய்யுளான் வருவதே சிறப்புடைத்தெனக் கொள்க.

வி-ரை:பாட்டு - அடி, தொடை முதலிய உறுப்புகள் அமைந்து ஓசை பொருந்த வருவது . அது வெண்பா முதலிய பாக்களாகவும் , தாழிசை , துறை , விருத்தம் ஆகிய இனங்களாகவும் வரும். உரை - செய்யுள்போல அடி, தொடை முதலிய உறுப்புகளின்றி நூற்பா போன்ற அமைப்பில் வருவது . நூற்பாவையும் செய்யுள் என்பர், இலக்கண விளக்கப் பாட்டியலார் . பாடை - பிற மொழி . இங்ஙன லங்கிய மொழி விரவிவரும்