இ-ள்: மலையில் தவம் புரிந்தோள் - சயமடந்தை. அலை கடலில் தவம் புரிந்தோள் - சீதேவி. வாளரவின் வெய்ய தலையில் நின்று தவம் புரிந்தோள் - பூமிதேவி. இப்படிப் பெரிய தவம் புரிதலாலே அவர்களால் தழுவப்பட்ட அபயனுடைய புயத்தை யாம் தழுவுதற்கு எத்தவம் புரிந்தோம்? எ-று.
வி-ரை: ஒரு கருமமே காரகமாகவும், அதுவே ஏதுவாயும் நிற்பின் அது கருமகாரக ஏதுவாகும்.
இப்பாடற்கண் கூறப்பட்ட கருமம் தவமாகும். அதுவே அபயன் புயத்தைப் புணர்வித்தது எனக் காரகமாயும், அங்ஙனம் புணர்தற்கு ஏதுவாதல்பற்றி ஏதுவாயும் நின்றலின், இது கருமகாரக ஏதுவாயிற்று.
4. கருவி காரகவேது
எ-டு : 'கரடத்தான் மாரியும் கண்ணால் வெயிலும்
நிரைவயிரக் கோட்டால் நிலவும் - சொரியுமால்
நீளார்த் தொடையதுல னேரார் கலிங்கத்து
வாளாற் கவர்ந்த வளம்.'
இ-ள்: மதத்தால் மழையையும், கண்ணின் கடுமையால் வெயிலையும், கோட்டின் வெண்மையால் நிலவையும் கொடா நின்றது; நெடிய ஆர்த் தாரையுடைய ஒப்பில்லாதானாகிய சோழன் பகை கொண்ட கலிங்கருடைய தேயத்துச் சென்று வாளாலே கவர்ந்து கொண்ட வளம் எ-று.
ஈண்டு வளம் என்றது, கலிங்கனுடைய யானைத்திரள்கள் எனக் கொள்க. கரடம்-மதம்.
வி-ரை:ஒரு கருவியே காரகமாயும், அதுவே ஏதுவாயும் நிற்பின் அது கருவிகாரக ஏதுவாகும்.
இப்பாடற்கண் கூறப்பட்ட கருவிகள் கரடம், கண், கோடு என்பனவாம். இவை முறையே மாரி, வெயில், நிலவு ஆகியவற்றைத் தோற்றுவித்தது என்பதால் காரகமாயும், இவற்றை அக்கருவிகள் தோற்றுவித்தன என்பதால் அவையே ஏதுவாயும் நிற்றலின், இவை கருவிகாரக ஏதுவாயின.
(32)
ஞாபகவேது
59. அவையல பிறவின் அறிவது ஞாபகம்.
எ-ன், ஞாபகவேது ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ-ள்: அச்சொல்லப்பட்ட காரணமன்றிப் பிற காரணத்தினால் உய்த்துணரத் தோன்றுவது ஞாபக ஏதுவாம் எ-று.
எ-டு : 'காதலன்மேல் ஊடல் கரையிறத்தல் காட்டுமால்
மாதர் நுதல்வியர்ப்ப வாய்துடிப்ப - மீது
மருங்குவளை வின்முரிய வாளிடுக நீண்ட
கருங்குவளை சேந்த கருத்து'
காதலன் - தலைவன். மேல் - இடம். முரிதல் - வளைதல். வில் - புருவம். இடுக - சிறுக. கருங்குவளை - கண். சேத்தல் - சிவத்தல். கரை - எல்லை. இறத்தல் - இல்லாமை.